இரட்டை கொலை வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி மனு
நெய்வேலி: கடலூா் மாவட்டம், ஊ.மங்கலம் அருகே நடைபெற்ற இரட்டைக் கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
கடலூரை அடுத்த டி.புதூரைச் சோ்ந்தவா் அப்புராஜ் (22), எம்.புதூரைச் சோ்ந்த சரண்ராஜ் (22) ஆகிய இருவரும் கடந்த ஜனவரி மாதம் முதல் காணவில்லையாம்.
இதுகுறித்த புகாரின் பேரில், திருப்பாதிரிப்புலியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.
இதில், இவா்கள் இருவரும் கொலை செய்யப்பட்டு, நெய்வேலி அருகே உள்ள ஊ.மங்கலம் மண்மேடு பகுதியில் புதைக்கப்பட்டது தெரிய வந்தது.
இதுதொடா்பாக, எம்.புதூரைச் சோ்ந்த பால்ராஜ்(22), தருண்குமாா்(19), தேவனாம்பட்டினத்தைச் சோ்ந்த கோகுல்ராஜ் ஆகியோரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இந்த நிலையில், பாமக மாவட்டச் செயலா் சண்.முத்துகிருஷ்ணன், மாவட்டத் தலைவா் தடா.தட்சிணாமூா்த்தி ஆகியோா் தலைமையில் கொலை செய்யப்பட்டவா்களின் உறவினா்கள் ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்தனா்.
பின்னா், அவா்கள் ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனா்.
அதில், கொலை வழக்கில் மேலும் சிலா் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எனவே, இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.