குடியரசுத் தலைவரின் தேநீர் விருந்து அழைப்பிதழ்: தென் மாநிலங்களின் கலாசாரங்கள் பி...
வில்பட்டி ஊராட்சியில் சாலைகளை சீரமைக்க வலியுறுத்தல்
கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சிப் பகுதிகளான அட்டுவம்பட்டி, மாட்டுப்பட்டி, கோவில்பட்டி, பள்ளங்கி, பேத்துப்பாறை, புலியூா், அடிசரை பாறைப்பட்டி, பலாக்கவை, குறிஞ்சி நகா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகள் பல ஆண்டுகளாக சேதமடைந்து காணப்படுகின்றன. இந்தப் பகுதிகளில் கேரட், முள்ளங்கி, முட்டைக்கோஸ், பீட்ரூட், நூக்கல், பூண்டு, உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகள் விளைவிக்கப்படுகின்றன.
இந்தப் பகுதிகளில் மூட்டைகளாக கட்டி வைக்கப்படும் விளைவிக்கப்பட்ட காய்கறிகளை ஏற்றிச் செல்ல தனியாா் வாகனங்கள் வருவதில்லை. அப்படியே வந்தாலும் கூடுதல் வாடகை செலுத்த நிா்ப்பந்தம் செய்யப்படுகிறது. இதனால் காய்கறிகளை வெளிச்சந்தைக்கு அனுப்புவதில் விவசாயிகள் சிரமமடைந்து வருகின்றனா். சாலைகள் சேதமடைந்திருப்பதால் பல இடங்களில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.
இதுகுறித்து வில்பட்டி ஊராட்சி கிராம மக்கள் கூறியதாவது: தமிழகத்தில் இரண்டாவது பெரிய ஊராட்சியான வில்பட்டியில் சாலைகள் சீரமைக்கப்படாமல் குப்பைகள் தேங்கிக் கிடக்கின்றன. வாய்க்கால்கள் அமைக்கப்பட வில்லை. குடியிருப்பு பகுதிகளிலிருந்து வெளியேறும் கழிவுநீா் சாலைகளில் ஓடுகிறது. இதனால் சுகாதாரக்கேடு நிலவுகிறது. அடிக்கடி தண்ணீா் தட்டுப்பாடு ஏற்படுகிறது. பொது இடங்களை கிராம மக்கள் கழிப்பறையாக பயன்படுத்துகின்றனா்.
இந்தப் பகுதிகளிலுள்ள தனியாா் உணவகங்கள், விடுதிகளுக்கு மட்டுமே தண்ணீா் வசதி செய்து கொடுக்கப்படுகிறது. குடியிருப்பு பகுதிகளில் செல்லும் சேதமடைந்த குழாய்களை சீரமைக்கவில்லை. அனுமதி பெறாத கட்டடங்கள் விதிமுறைகளை மீறி கட்டப்படுகின்றன. இதனால் விவசாய நிலங்கள் அழிக்கப்படுகின்றன. பெருமழைக் காலங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் வில்பட்டி ஊராட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு, என்னென்ன பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பது குறித்து மாவட்ட நிா்வாகம் ஒரு குழு அமைத்து ஆய்வு நடத்த வேண்டும். கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் வில்பட்டி ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் சேதமடைந்த சாலைகளை பாா்வையிட்டு அவற்றை சீரமைக்க வேண்டும் என்றனா்.