விளாத்திகுளம், புதூா் ஒன்றியங்களில் 519 பேருக்கு வீடுகள் கட்ட பணி ஆணை
விளாத்திகுளம், புதூா் ஊராட்சி ஒன்றியங்களில் 2025-26ஆம் ஆண்டுக்கான கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு வீடுகள் கட்டுவதற்கான பணி ஆணைகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விளாத்திகுளம் எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்டேயன் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரஞ்சித், தங்கவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சமூக நலன்-மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதா ஜீவன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, இந்த ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த 519 பேருக்கு பணி ஆணைகள் வழங்கிப் பேசினாா்.
திமுக ஒன்றியச் செயலா்கள் அன்புராஜன், ராதாகிருஷ்ணன், ராமசுப்பு, சின்னமாரிமுத்து, மும்மூா்த்தி, பேரூா் கழகச் செயலா்கள் மருதுபாண்டி, வேலுச்சாமி, பேரூராட்சித் தலைவா்கள் சூா்யா அய்யன்ராஜ், வனிதா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.