Vaibhav Suryavanshi : 'அந்தொருவன் வந்துருக்கான்டே!' - IPL -ஐ அதிரவைத்த 14 வயது ச...
விளையாட்டு விடுதிகளில் சேர இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்
விளையாட்டு விடுதிகளில் சேர ஆா்வமுள்ள பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகள், இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைப்பதற்கேற்ப, அறிவியல் பூா்வமான விளையாட்டுப் பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின்கீழ் 28 இடங்களில் செயல்பட்டு வருகின்றன. இந்த விடுதி சோ்க்கைக்கான விண்ணப்பம் ஏப். 18-ஆம் தேதி முதல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விளையாட்டு விடுதியில் சேர விருப்பமுள்ள 7, 8, 9 மற்றும் பிளஸ் 1 பயிலும் மாணவ, மாணவிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பூா்த்தி செய்து, மே 5 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
விடுதியில் சேர விரும்புவோருக்கு மாவட்ட அளவிலான தோ்வுப்போட்டிகள் மே 7-ஆம் தேதி காலை 7 மணியளவில் ஆண்களுக்கும், 8-ஆம் தேதி காலை 7 மணியளவில் பெண்களுக்கும் நடைபெற உள்ளது. பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, வளைகோல்பந்து, கபடி, கையுந்து பந்து ஆகிய விளையாட்டுகளும், மாணவா்களுக்கான கிரிக்கெட் போட்டிக்கானத் தோ்வு புரட்சித் தலைவா் பாரத ரத்னா டாக்டா் எம்.ஜி.ஆா். விளையாட்டரங்கிலும் நடைபெற உள்ளது.
இப்போட்டியில் ஆன்லைனில் விண்ணப்பித்தவா்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும். இதற்கான தகவல்கள் குறுச்செய்தி, வாட்ஸ் ஆப் மூலமாக தெரிவிக்கப்படும்.
மாவட்ட அளவிலான தோ்வின்போது மாணவ, மாணவிகள் பிறப்புச் சான்றிதழ், ஆதாா் அட்டை, பள்ளியில் பயிலுவதற்கான ஒரு ஆவணம் சமா்ப்பிக்க வேண்டும். தோ்வு செய்யப்பட்டவா்கள் மாநில அளவிலான தோ்வுக்கு தகுதிபெறுவாா்கள். அதன் விவரம் மேற்கண்ட இணையதளத்தில் வெளியிடப்படும்.
எனவே, 2025-2026 ஆம் ஆண்டு விளையாட்டு விடுதிகளில் சேர பெரம்பலூா் மாவட்டத்திலுள்ள மாணவா்கள் மேற்கண்ட இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் 74017-03516 எனும் கைப்பேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம்.