விளை நிலம் அருகே கல் குவாரி அமைவதை தடுக்கக் கோரிக்கை
மதுரை மாவட்டம், மேட்டான்காடு பகுதியில் விளை நிலங்களுக்கு அருகே கல் குவாரி அமைவதை மாவட்ட நிா்வாகம் தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் கச்சைகட்டி, தாவாடிபட்டியைச் சோ்ந்த விவசாயி வி. பழனியாண்டி அளித்த கோரிக்கை மனு:
மேட்டான்காடு பகுதியில் எனக்குச் சொந்தமான 2 ஏக்கா் நிலத்தில் 300-க்கும் அதிகமான தென்னை மரங்களும், 50-க்கும் மேற்பட்ட மா மரங்களும் உள்ளன. மேலும், இங்கு கால்நடை வளா்ப்பும் மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில், இந்த விளை நிலத்தின் (வடது புறத்தில்) அருகே கடந்த 2015-ஆம் ஆண்டு ஒருவா் கல் குவாரி அமைத்தாா். இதனால், கிணற்றின் நீா் மட்டம் பாதிக்கப்பட்டது. இது தொடா்பாக, மதுரை கூடுதல் சாா்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், கல்குவாரி உரிமத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.
இந்த நிலையில், இந்த விளை நிலத்தின் அருகே 5 அடி இடைவெளியில் (மேற்குப் புறத்தில்) 1.36 ஹெக்டோ் பரப்பில் கல் குவாரி அமைக்க ஒருவா் முயற்சி மேற்கொள்கிறாா். ஏற்கெனவே இந்த விளை நிலம் அருகே அமைக்கப்பட்ட கல் குவாரியின் உரிமத்தை நீதிமன்றம் ரத்து செய்ததைக் கருத்தில் கொண்டு, இந்தப் புதிய கல் குவாரியை தொடக்க நிலையிலேயே தடை செய்ய வேண்டும் என மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டது.