புதுச்சேரி பழைய துறைமுகத்தில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
``விவாகரத்து உறுதியானதால முறைப்படி செய்யவேண்டியதைக் கேட்டேன்" - ஜெயஶ்ரீ
சின்னத்திரையின் ரியல் லைஃப் ஜோடியாக வாழ்ந்து வந்த ஈஸ்வர் - ஜெயஶ்ரீ இடையே விவாகரத்து ஏற்பட்டது தொடர்பாக ஈஸ்வர் தரப்பில் அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், ஜெயஶ்ரீயும் தன் கருத்தைத் தெரிவித்துள்ளார்.
சீரியல்களில் நடித்ததன் மூலம் நட்பாகி பிறகு திருமணமும் செய்து கொண்டவர்கள் ஈஸ்வர் மற்றும் ஜெயஶ்ரீ. சில ஆண்டுகள் எந்தச் சிக்கலும் இல்லாமல் சென்று கொண்டிருந்த இவர்களின் வாழ்க்கையில் திடீரென பிரச்னை உண்டாக, கணவன் கொடுமைப்படுத்துவதாக போலீஸ் புகார் கொடுத்தார் ஜெயஶ்ரீ. அப்போது நாம் ஜெயஶ்ரீயிடம் பேசியிருந்தோம். அப்போது இதுபற்றிக் கூறிய அவர்,
''எங்களுக்குக் கல்யாணமாகி நாலு வருஷம் ஆகுது. அவர் குடிப்பார் என்கிற விஷயம் கல்யாணத்துக்கு முன்னாடியே எனக்குத் தெரியும். ஆனா, கடன் வாங்கி சூதாடுவார்ங்கிறதெல்லாம் பிறகுதான் தெரிஞ்சது. லட்சக்கணக்குல கடன் வெச்சிருக்கார். அந்தக் கடனை எல்லாம் நான் தான் கட்டிக்கிட்டு இருக்கேன். `தேவதையைக் கண்டேன்’ தொடரில் நடிக்கத் தொடங்கிய பிறகு நடிகை மஹாலக்ஷ்மி கூடப்பழக்கம். அவங்க கூட வாழ ஆசைப்பட்டு என்கிட்ட இருந்து டைவர்ஸ் கேட்டார். நான் மறுத்தேன்.
அதனால் என்னைக் கொடுமைப்படுத்த ஆரம்பிச்சிட்டார். என் முன்னாடியே மகாலக்ஷ்மிக்கு வீடியோ கால் போட்டு கொஞ்சிக் கொஞ்சிப் பேசுவார். அவங்களுக்கு ஏற்கெனவே கல்யானமாகி ஒரு பையன் இருக்கான். அந்தப் பையன்கிட்ட தன்னை `அப்பா’ன்னு கூப்பிட சொல்லுவார். குடிச்சுட்டு வந்து என்னை அடிப்பார். வயித்துல எட்டி உதைத்ததில் வலி எனக்கு இன்னும் இருக்கு. நடு வீட்டில் சிறுநீர் கழிப்பார். இப்படி கொடுமை அளவில்லாமல் போயிட்டிருந்ததாலதான் போலீஸ்ல புகார் கொடுத்தேன். விசாரிக்கப் போன போலீசையும் தகாத வார்த்தைகளில் பேசியிருக்கார். கடைசியில் அவரையும் அவரது அம்மாவையும் இப்ப கைது பண்ணியிருக்காங்க’’ என்றார் ஜெயஸ்ரீ.
ஈஸ்வர் ஜெயிலுக்குப் போய் வந்த பிறகு இருவரும் விவாகரத்துக்கு விண்ணப்பித்தனர். தொடர்ந்து கோவிட் ஊரடங்கு அமலாகிவிட்டதால் வழக்கு நிலுவையில் இருந்து வந்தது. தவிர விவாகரத்துக்குச் சம்மதிக்கும் பட்சத்தில் தனக்கு சில செட்டில்மென்ட் செய்யப்பட வேண்டுமென ஜெயஶ்ரீ கேட்டதாகவும் சொல்லப்பட்டது. இந்தச் சூழலில்தான் நேற்று முன் தினம் இவர்களுக்கு முறைப்படி விவாகரத்து வழங்கப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக ஈஸ்வர் வெளியிட்டிருந்த அறிக்கையில், ``நானும் ஜெயஸ்ரீயும் இன்று முதல் அதிகாரபூர்வமாகப் பிரிந்துவிட்டோம். முறைப்படியான செட்டில்மென்ட் எல்லாம் முடிந்து விட்டதால் நாங்கள் இருவரும் அவரவர் வாழ்க்கையை அவரவர் விருப்பப்படி தீர்மானித்துக் கொள்ளப் போகிறோம்.
நான் சந்தித்த கடந்த காலங்கள் என்னுடைய வாழ்க்கையில் ஒரு சோதனையான காலகட்டம் என்றாலும் இன்னைக்கு அதிலிருந்து மீண்டு நல்லதொரு நிலையில தான் இருக்கேன். இனி என் விருப்பமான நடிப்பில் தீவிர கவனம் செலுத்தப் போகிறேன். சவாலான காலங்களில் என்னைப் பாதுகாத்த கடவுளுக்கு நன்றி.’ என்று குறிப்பிட்டிருந்தார்.இந்தச் செய்தி தொடர்பாக ஜெயஶ்ரீயிடம் நாம் பேசினோம். ''இந்த விவகாராம் பூதாகரமா மீடியாவுல பேசப்பட்டது. அவ்வளவு பெரிய அசிங்கங்களை சந்திச்சதாலயும் விவாகரத்து முடிவாகிட்டா அதையொட்டி முறைப்படி செய்யப்பட வேண்டிய சில விஷயங்களைச் செய்து தரணும்கிற கோரிக்கையைத்தான் நான் வச்சேன். நீண்ட இழுபறிக்குப் பிறகு அந்த விஷயங்கள் செய்துதரப்பட்டதால் விவாகரத்தாகி எல்லாத்துக்கும் ஒரு முற்றுப்புள்ளி வந்திருக்கு. அவர் சொன்ன விவாகரத்து விஷயம் நிஜம்தான். ஏற்கனவே இந்த விஷயம் மீடியாவுல போதும் போதும்கிற அளவுக்கு அலசிக் காயப்போட்டுட்டதால இன்னும் அது தொடர்பா எதுக்குப் பேசணும்னுதான் நான் இந்த விஷயம் பத்திச் சொல்லல. இனி இது பத்தி பேசுறதுக்கு எதுவும் இல்லைங்க" என்று முடித்துக் கொண்டார் இவர்.