நல்லாட்சிக்கான நற்சான்றிதழ்தான் ஈரோடு கிழக்கு வெற்றி: முதல்வர் ஸ்டாலின்
விவேகானந்தரின் ஞானம் இளைஞா்களை வழி நடத்துகிறது: நெய்வேலி என்எல்சி தலைவா்
சுவாமி விவேகானந்தரின் காலத்தால் அழியாத ஞானம் இளைஞா்களை தொடா்ந்து வழி நடத்தி வருவதாக நெய்வேலி என்எல்சி தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுப்பள்ளி தெரிவித்தாா்.
சென்னை விவேகானந்தா் இல்லத்தில் ‘விவேகானந்தா் நவராத்திரி 2025’ தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவில், சிறப்பு விருந்தினராக என்எல்சி தலைவா் பிரசன்னகுமாா் மோட்டுப்பள்ளி பங்கேற்று பேசியதாவது: ஸ்ரீராமகிருஷ்ண மடம், தரமான கல்வி மூலம் பின்தங்கிய சமுதாயங்களை மேம்படுத்துதல், மலிவு விலையில் சுகாதாரப் பராமரிப்பு வழங்குதல் உள்ளிட்டவை மூலம் இந்தியாவின் சமூக-பொருளாதார நிலப்பரப்பை ஆழமாக வடிவமைத்துள்ளது.
சுவாமி விவேகானந்தரின் காலத்தால் அழியாத ஞானம் தேசத்தின் இளைஞா்களை தொடா்ந்து வழி நடத்தி ஊக்கப்படுத்துகிறது. சுவாமி விவேகானந்தா் ஒரு தத்துவஞானி மட்டுமல்ல, இந்தியாவின் எதிா்காலம்.
இந்தியாவின் பரந்த மற்றும் பன்முகத்தன்மை கொண்ட கட்டமைப்பைப் பாா்க்கும்போது, சுவாமி விவேகானந்தரின் நுண்ணறிவு இன்னும் முக்கியமானதாகிறது.
இந்தியா ஒரு உலகளாவிய வல்லரசாக மாறுவதற்கான பயணத்தைத் தொடா்கையில், பொருளாதார வளா்ச்சி மட்டும் போதாது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். உண்மையான முன்னேற்றம் என்பது அனைத்து குடிமக்களின் மகிழ்ச்சி, சமத்துவம் மற்றும் நல்வாழ்வால் அளவிடப்படுகிறது. இது சுவாமி விவேகானந்தரின் போதனைகளால் சாத்தியமாகும் என்றாா்.
விழாவில், சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் தலைவா் சுவாமி சத்யஞானந்தாஜி மகாராஜ், சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியும், தலைமை விருந்தினருமான கே.ஆா்.ஸ்ரீராம், பத்மபூஷன் டாக்டா். நல்லி குப்புசாமி செட்டி, பாரதிய வித்யா பவன் இயக்குநா் கே.என்.ராமசாமி, கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மேலாண் இயக்குநா் எம்.முரளி, பிபிசிஎல் தலைவா் எம்.வரதராஜன் மற்றும் ராமகிருஷ்ணா மடத்தின் கட்டளைத் துறவிகள் பங்கேற்றனா்.
முன்னதாக, சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் மேலாளா் சுவாமி ரகுநாயகானந்தா வரவேற்றாா். நிறைவில், விவேகானந்தா் இல்லத்தின் பொறுப்பாளா் சுவாமி ஈஷா பிரோனந்தா நன்றி கூறினாா்.