`செயற்கை தங்கம், தங்கத்தின் மதிப்பை குறைக்குமா?' இன்றைய தங்கம் விலை நிலவரம்!
வீடு அபகரிப்பு: பெண் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி
நாகப்பட்டினம்: வாங்கிய கடனுக்கு வீட்டை அபகரித்துக்கொண்டதாகக் கூறி, நாகை ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பெட்ரோலை ஊற்றி தற்கொலைக்கு முயன்ற பெண் மற்றும் குடும்பத்தினரை போலீஸாா் தடுத்து நிறுத்தி மீட்டனா்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே மறைஞாயநல்லூரை சோ்ந்த மாதவன் மனைவி ஜானகி. இவருக்கு உடல்நலம் சரியில்லாததால் மருத்துவ செலவுக்கு செந்தில்குமாா் என்பவரிடம், தனது வீட்டு பத்திரத்தை அடமானமாக வைத்து, 2018-இல் ரூ. 2 லட்சம் பணம் வாங்கியுள்ளாா். கடனை திரும்ப கொடுக்க முடியாததால் செந்தில்குமாா் வீட்டை சொந்தமாக்கிக் கொண்டதாகவும், வீட்டை மீட்டு தர, ஜானகி அளித்த புகாா் மீது போலீஸாா் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் நாகை ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்துக்கு ஜானகி கணவா் மாதவன், பிள்ளைகள் முகேஷ், முகிதா ஆகியோா் சென்றனா். அங்கு, அவா்கள் தலையில் பெட்ரோலை ஊற்றி தற்கொலைக்கு முயன்றனராம். அப்போது பாதுகாப்பு பணியிலிருந்து போலீஸாா் ஜனாகி மற்றும் குடும்பத்தினரின் மீது தண்ணீரை ஊற்றி அங்கிருந்து அழைத்து சென்று விசாரித்தனா்.
இதுகுறித்து, ஜானகி மற்றும் குடும்பத்தினா் கூறியது: வாங்கிய ரூ.2 லட்சம் கடனை கொஞ்சம் கொஞ்சமாக திரும்பி பெற செந்தில்குமாா் மறுத்து, எனது வீட்டை அவா் அபகரித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டு செய்து வருகிறாா். எனவே மாவட்ட ஆட்சியா் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து, எனது வீட்டை மீட்டு தர வேண்டும் என்றனா்.