அதானிக்கு தாராவி மறுவளா்ச்சி திட்டம் ஒதுக்கப்பட்டதற்கு எதிரான மனு: மும்பை உயா்நீ...
வீட்டில் சமைக்கிற உணவிலும் வில்லங்கமா? எப்படி?
'ஏன் வெளிய சாப்புடுற, உடம்புக்கு நல்லதல்ல' பெரும்பாலாக நம் குடும்பத்தில் பெரியவர்கள் இப்படி சொல்லக் கேட்டிருப்போம். ஹோட்டலில் சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்னைகள் என்னென்ன என்பதை ஒவ்வொருமுறை வெளியே சாப்பிட்டுவரும்போதும் வீட்டில் உள்ளவர்கள் பட்டியலிடுவார்கள்.
ஏனெனில் வீட்டில் சமைத்த உணவு ஆரோக்கியமானது, சுத்தமாக சமைக்கப்பட்டிருக்கும் என்பது எல்லாருக்கும் தெரிந்ததுதான். குறிப்பாக உணவகங்களில் சுவைக்காகச் சேர்க்கப்படும் வேதிப்பொருள்கள் வீட்டில் சமைக்கும் உணவில் சேர்க்கப்படாது. வீட்டில் சமைக்கும் உணவுப்பொருள்களின் தரம், சேர்க்கப்படும் மசாலா, எண்ணெய், உப்பு, சர்க்கரை எல்லாம் அளவுடன் இருக்கும். சரியாக சமைக்கப்படுவதால் உணவின் மூலமாக நோய்கள் பரவுவதும் ஓரளவு தடுக்கப்படும். ஏனெனில் அசைவ உணவுகள் எல்லாம் நன்றாக சமைக்கப்பட வேண்டும். இதனால் வெளியில் சாப்பிடுவதைவிட வீட்டில் சாப்பிடுவது பாதுகாப்பானதுதான்.
ஆனால், இன்றோ வீட்டில் இருந்துகொண்டே ஆர்டர் செய்து சாப்பிடும் பழக்கம் அதிகரித்து வருகிறது. வீட்டில் பெற்றோர் இருவரும் பணிக்குச் சென்றால் வார இறுதி நாள்களில் உணவகங்களில் சாப்பிடும் பழக்கமும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. பெரும்பாலான நகரங்களில் இதனை ஒரு பொழுதுபோக்காகவே கருதுகின்றனர். இதன் காரணமாக உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள் போன்ற பல்வேறு உடல்நலப் பிரச்னைகள் ஏற்படுவதாக சுகாதார நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.
பல்வேறு நோய்களில் இருந்து தற்காத்துக்கொள்ள வீட்டில் சமைத்த உணவுகளைச் சாப்பிடவும் ஹோட்டல் உணவுகளைத் தவிர்க்கவும் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
இதையும் படிக்க | உடல் எடையைக் குறைக்க டயட் மட்டுமே போதுமா? - மருத்துவர் என்ன சொல்கிறார்?
வீட்டில் சமைத்த உணவு ஆரோக்கியமற்றது! எப்படி?
வீட்டில் சமைக்கிற உணவு ஆரோக்கியமானதுதான் என்றாலும் அனைத்து உணவுகளும் அப்படி அல்ல.
ஏனெனில் இப்போதெல்லாம் வீடுகளில்கூட ஹோட்டல்களுக்கு போட்டியாக சமையல் நடக்கிறது. உணவுச் சுவை நன்றாக இருக்க வேண்டும் என அதிக எண்ணெய், அதிக மசாலா பொருள்கள் சேர்த்து சமைக்கின்றனர். நெய், வெண்ணெய், சர்க்கரை, உப்பு ஆகியவற்றை சிலர் அதிகமாகவே பயன்படுத்துகின்றனர்.
எண்ணெய், சர்க்கரை, உப்பு உள்ளிட்டவை அதிகம் பயன்படுத்தும்போது அது பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
இதுமட்டுமின்றி வறுத்த உணவுகளுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். குழந்தைகளுக்குக்கூட வீட்டிலேயே உருளைக்கிழங்கு வறுவல், சிப்ஸ் என பெற்றோர்கள் பழக்கப்படுத்துகின்றனர்.
கடைகளில் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் மசாலாப் பொடிகள், இஞ்சி - பூண்டு விழுது, ரெடிமேட் சப்பாத்தி, ரெடிமேட் இடியாப்பம் என வந்துவிட்டது. இவற்றை வாங்கி சமைக்கும்போது உடலுக்கு கெடுதல்தான்.
அடுத்து வீட்டிலேயே ஃபிரைடு ரைஸ், கடைகளில் விற்கப்படும் சாஸ், மைனஸ் கொண்டு உணவு தயாரித்துச் சாப்பிடுகிறார்கள். இவற்றை கடைகளில் சாப்பிடுவதைவிட வீட்டில் சமைத்து சாப்பிடுவது பாதிப்பு குறைவுதான் என்றாலும் அது உடலுக்கு எந்த சத்தையும் வழங்காது என்கின்றனர் நிபுணர்கள்.
காய்கறிகள் உள்ளிட்டவற்றை அதிகமாக சமைப்பதும் சரியல்ல என்கின்றனர். காய்கறிகளை அதிகமாக சமைப்பதால் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இல்லாமல் போய்விடும். எனவே, அதிக வெப்பநிலையில் சமைப்பதை தவிர்க்க வேண்டும் என்று கூறுகின்றனர்.
இதையும் படிக்க | ஃபகத் ஃபாசில், ஆலியா பட்... இன்னும் பலர்! ஏடிஎச்டி என்பது என்ன? காரணங்களும் தீர்வுகளும்!
ஐசிஎம்ஆர் கூறுவது என்ன?
இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனமும், வீட்டில் சமைக்கப்படும் உணவும் ஆரோக்கியமற்றதுதான் என்று கூறுகிறது. அதாவது அதிக உப்பு, சர்க்கரை, எண்ணெய் சேர்த்து சமைக்கப்படும் உணவு உடலுக்கு பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கிறது.
சமீபமாக மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் சில முக்கிய வழிகாட்டுதல்களையும் வழங்கியுள்ளது.
-- அதிக உப்பு, சர்க்கரை, எண்ணெய் சேர்க்கப்பட்ட உணவு, உடலுக்கு பல பிரச்னைகள் ஏற்படுத்தும். ஏனெனில் இவற்றில் கலோரி அதிகம் இருக்கும், சத்துகள் குறைவாகவே இருக்கும்.
-- பதிலாக, உணவில் அதிக அளவு காய்கறிகள், முழு தானியங்கள், பருப்பு வகைகள் அல்லது பீன்ஸ், நட்ஸ் அல்லது விதைகள், பழங்கள், தயிர் ஆகியவை கொண்ட சரிவிகித உணவு தேவை.
-- வீட்டில் சமைத்த உணவானாலும் அனைத்து ஊட்டச்சத்தும் நிறைந்த சரிவிகித உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள், கொழுப்புகள், நார்ச்சத்து ஆகியவற்றுக்கு இடையேயான சமநிலையைக் கொண்டிருக்க வேண்டும்.
-- ஒட்டுமொத்த கலோரியில் 5%-க்கும் அதிகமாக சர்க்கரை இருக்கக்கூடாது, ஒரு நாளைக்கு 20-25 கிராம் சர்க்கரை எடுத்துக்கொள்ளலாம். புரதம் ஒரு கிலோ எடைக்கு 0.66-0.83 கிராம் எடுக்க வேண்டும்.
-- அரிசி உள்ளிட்ட தானியங்கள் அளவு 45%-க்கு மேல் கூடாது. 15 சதவீதம் கலோரி, பருப்பு வகைகள், பீன்ஸ் மற்றும் இறைச்சியில் இருக்க வேண்டும். நட்ஸ், காய்கறிகள், பழங்கள், பாலில் இருந்து மீதமுள்ள கலோரி இருக்க வேண்டும். கொழுப்பு 30% -க்கும் குறைவாகவே இருக்க வேண்டும்.
-- ஆரோக்கியமற்ற உணவு முறையால் இந்தியாவில் தற்போது 56.4% பேர் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
-- சமையல் எண்ணெய்க்குப் பதிலாக நட்ஸ், எண்ணெய்வித்துகள், கடல் உணவுகளில் இருந்து நல்ல கொழுப்புகளை பெறலாம்.
இதையும் படிக்க | மாரடைப்பு யாருக்கெல்லாம் ஏற்படும்? - நம்பிக்கையும் உண்மையும்!
-- உடல் எடை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக புரோட்டின் மாத்திரைகளை எடுத்துக்கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
-- நிறைவுற்ற கொழுப்பு அமிலங்கள் அதிகமுள்ள நெய், வெண்ணெய், தேங்காய் எண்ணெய், பாமாயில், வனஸ்பதி ஆகியவற்றையால் உடல் பருமன் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும்.
-- ஆரோக்கியமான உணவு முறையும் உடற்பயிற்சியும் இருந்தால் இதய நோய், உயர் ரத்த அழுத்தம், டைப் 2 நீரிழிவு நோய் ஆகியவை ஏற்படும் வாய்ப்பு குறையும். இதனால் முன்கூட்டிய மரணங்களும் தடுக்கப்படும்.
எனவே, வீட்டில் சமைத்த உணவானாலும் என்ன சாப்பிடுகிறோம், அதில் என்னென்ன சத்துகள் உள்ளன, எவ்வளவு கலோரி எடுத்துக்கொள்கிறோம் என்பதைக் கவனிப்பது நல்லது. நோய்களைத் தவிர்க்கவும் ஆரோக்கியமாக இருக்கவும் சரிவிகித உணவை எடுத்துக்கொள்ளுங்கள்.