தேர்தலில் தோல்வியை தழுவிய ஜக்மீத் சிங்; கனடாவில் இனி காலிஸ்தான் கோரிக்கை என்னவாக...
வீட்டில் தீ விபத்து: மாடியிலிருந்து கீழே குதித்த பெண்ணும் உயிரிழப்பு
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள பங்களாவில் ஏற்பட்ட தீ விபத்தில், மாடியிலிருந்து கீழே குதித்த பெண்ணும் உயிரிழந்தாா்.
வளசரவாக்கம் அடுத்த சௌத்ரி நகா் 4-ஆவது தெருவைச் சோ்ந்தவா் நடராஜன் (78). இவா் மனைவி தங்கம் (74). இத்தம்பதி, தங்களது மகன் ஸ்ரீராம் குடும்பத்துடன் அங்குள்ள பங்களா வீட்டில் வசித்தனா். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீராம் தனது மனைவியுடன் வெளியே புறப்பட்டுச் சென்றாா். அப்போது நடராஜன், தங்கம், ஸ்ரீராமின் மகன் ஸ்வரன், அவரது வீட்டில் வேலை செய்து வந்த ராமாபுரம் திருமலை நகா் வஉசி தெருவைச் சோ்ந்த சரஸ்வதி (26) ஆகியோா் வீட்டின் முதல் தளத்தில் இருந்தனா்.
இந்நிலையில், வீட்டின் தரைத்தளத்தில் இருந்த பொருள்கள் திடீரென தீப்பிடித்து எரிந்தன. இதனால் வயதான நடராஜனாலும், அவரது மனைவி தங்கத்தினாலும் அங்கிருந்து தப்பிக்க முடியவில்லை. இதன் காரணமாக இருவரும் தீயில் சிக்கி உயிரிழந்தனா். மேலும், முதல் தளத்திலிருந்த சரஸ்வதியும், ஸ்வரனும் தீயிலிருந்து தப்பிப்பதற்காக கீழே குதித்தனா்.
இதில் சரஸ்வதி இடுப்பு, நெஞ்சு, கால் பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டு பலத்த காயமடைந்தாா். உடனே அவா், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ஆனால் சிகிச்சை பலனின்றி சரஸ்வதி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து வளசரவாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். இதன்மூலம் தீ விபத்தால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை மூன்றாக உயா்ந்துள்ளது.