வக்ஃப் மசோதா: செயல் அளவில் நடவடிக்கைகளை எப்போது? - விஜய் கேள்வி!
தேர்தலில் தோல்வியை தழுவிய ஜக்மீத் சிங்; கனடாவில் இனி காலிஸ்தான் கோரிக்கை என்னவாகும்? - ஓர் அலசல்!
"இந்த அறையில் இருக்கும் அனைவருக்கும் நன்றி. நீங்கள் செய்த அனைத்திற்கும் மிகவும் நன்றி. நியூ டெமாக்ராட்ஸிற்கு (New Democrats) இந்த இரவு ஏமாற்றமளிக்கக்கூடியதாக இருக்கும் என்பது எனக்கு தெரியும். மிக நல்ல வேட்பாளர்கள் பலரும் இன்று தோல்வியை தழுவியிருக்கிறார்கள். நான் உங்கள் அனைவருடனும் நேரத்தை செலவிட்டிருக்கிறேன். நீங்கள் அற்புதமானவர்கள்.
உங்களது சமூகத்தின் பிரதிநிதிகளாக நீங்கள் நிற்க முடியாது என்பதற்காக என்னுடைய மன்னிப்புகள். உங்கள் போராட்டத்தை நிச்சயம் தொடர்வீர்கள் என்று எனக்குத் தெரியும். இந்த வேலையை சிறந்த நபர்களும், சிறந்த குடும்பமும் இல்லாமலும் செய்ய முடியாது"
- தன் சொந்த தொகுதியான கனடாவின் பர்னபி சென்ட்ரலிலேயே தோல்வியை சந்தித்த ஜக்மீத் சிங்கின் நா தழுதழுத்த உரை இது.
ஜக்மீத் சிங் ஒரு சீக்கியர். இவர் அடிப்படையில் ஒரு வழக்கறிஞர்.
கனடாவில் பிறந்து வளர்ந்த இவர், காலிஸ்தான் ஆதரவாளார் ஆவார். 2011-ம் ஆண்டு ஒன்டாறியோ மாகாண சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு அரசியலுக்கு என்ட்ரி கொடுத்தார் இவர். பின்னர், 2017-ம் ஆண்டு நியூ டெமாக்ராடிக் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றார்.
கனடாவின் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த ஒருவர் கனடாவின் முக்கிய கட்சியின் தலைவர் ஆவது அதுவே முதல் முறை. அதனால், ஜக்மீத் சிங்கை கனடா மட்டும் திரும்பி பார்க்கவில்லை. உலகமே திரும்பி பார்த்தது. இந்தியா கூட மகிழ்ச்சி தெரிவித்திருந்தது.
2017-ம் ஆண்டில் இவர் நியூ டெமாகிராட்டிக் கட்சியின் தலைமை பொறுப்பேற்றதில் இருந்து, இதுவரை மூன்று தேர்தல்களை சந்தித்துள்ளார்.
இவர் சந்தித்த முதல் தேர்தலான 2019-ம் ஆண்டு தேர்தலில் இவரது கட்சி 16 சதவிகித வாக்குகளை பெற்றிருந்தது.
இரண்டாம் தேர்தலில் (2021) 17.8 சதவிகிதத்தை பெற்றிருந்தது நியூ டெமாகிராட்டிக் கட்சி.
கடந்த ஏப்ரல் 29-ம் தேதி நடந்த தேர்தலில், இவரது கட்சி வெறும் 6.3 சதவிகித இடத்தை மட்டுமே பெற்றுள்ளது.

நியூ டெமாகிராட்டிக் கட்சி என்பது கனடாவின் மிக முக்கியமான கட்சிகளில் ஒன்று.
2021-ம் ஆண்டு ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி ஆட்சி அமைத்ததில் மிகப் பெரிய பங்கு இவருக்கும், இவரது கட்சிக்கும் உண்டு.
2021-ம் ஆண்டு ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி ஆட்சி அமைக்கத் தேவையான இடங்களை பிடிக்கவில்லை. அதனால், ஜக்மீத் சிங்கின் நியூ டெமாகிராட்டிக் கட்சி கொடுத்த ஆதரவில் தான், லிபரல் கட்சி ஆட்சியை அமைத்தது. ட்ரூடோ ஆட்சி அமைக்க உதவியதால், ஜக்மீத்தை 'கிங் மேக்கர்' என்று கூட கனடாவில் அழைத்தனர்.
அதனால், ட்ரூடோ ஆட்சி நிர்வாகத்தில் ஜக்மீத் சிங்கின் பேச்சையும் கேட்க வேண்டும் என்கிற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்.
ஜஸ்டின் ட்ரூடோ காலிஸ்தானுக்கு ஆதரவான நிலைபாட்டை எடுத்தது... காலிஸ்தான் ஆதரவு நிர்வாகி நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்தியாவை ட்ரூடோ குற்றம்சாட்டியது... போன்றவற்றின் பின்னணியில் ஜக்மீத் சிங்கின் கை உள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
ஆனால், கடந்த மாதம் நடந்த கனடா நாட்டின் நாடாளுமன்றத் தேர்தலில், இவரது கட்சி வெறும் ஏழு இடங்களை தான் பிடித்துள்ளது. இந்தக் கட்சி, தான் முன்னாள் பெற்றிருந்த பிரதிநிதித்துவத்தைப் பெற 12 இடங்களை பிடித்திருக்க வேண்டும்.
மேலும், ஜக்மீத் சிங் தனது சொந்தத் தொகுதியான பர்னபி சென்ட்ரலிலேயே தோல்வியை தழுவியுள்ளார். இவரது தோல்வி இவரது கட்சிக்கும், கனடாவில் இருக்கும் சில மக்களுக்கும் மைனஸாகவும், வருத்தமாகவும் இருந்தாலும், இந்தியாவிற்கு இது சாதகமான விஷயமாக பார்க்கப்படுகிறது.
முன்னால் கூறும்போது, ஜக்மீத் சிங் நியூ டெமாக்ராட்டிக் கட்சியின் தலைமை பொறுப்பேற்றிருந்தது இந்தியாவிற்கு சந்தோஷம் என்று கூறியிருந்தோம். ஆனால், 2017 டு 2025 காலக்கட்டத்தில், ஜக்மீத் சிங்கின் கொள்கைகளால் அவர் மீது இருந்த இந்தியாவின் பார்வை மாறியுள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை 1970-களில் இருந்து 'காலிஸ்தான்' பெரிய தலைவலியாக இருந்து வருகிறது. ஜக்மீத் சிங் காலிஸ்தான் ஆதரவாளார். அவர் பொதுவெளிகளில் காலிஸ்தானுக்கு ஆதரவாக பேசுவது... அதற்கு ஆதரவான செயல்களில் ஈடுபடுவது என இருந்தார்... இருக்கிறார்.
மேலும், ஜஸ்டின் ட்ரூடோ காலிஸ்தானுக்கு ஆதரவான சில நிலைபாடுகள் எடுக்க இவரே காரணம் என்போரும் உண்டு. இது இந்தியா - கனடா உறவில் மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டதற்கு மிக முக்கிய காரணம் ஆகும்.
ஜக்மீத் சிங் தனது தோல்விக்கு பொறுப்பேற்று நியூ டெமாக்ராட்டிக் கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும், இவரது கட்சி வெறும் 7 இடங்களை மட்டுமே பிடித்துள்ளதால், இவராலும், இவரது கட்சியாலும் ஆட்சி நிர்வாகத்தில் பெரியளவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது... இவரது கருத்துகளும் முன்னிருந்த அளவுக்கு செல்லாது.
இந்த இடத்தில் காலிஸ்தான் பற்றியும், காலிஸ்தான் கோரிக்கை எப்படி கனடாவிற்குள் சென்றது என்பதை பற்றியும் தெரிந்துகொள்வது அவசியமாகிறது.
இந்தியாவில் இருக்கும் சீக்கியர்களின் தனி நாடு கோரிக்கையே காலிஸ்தான் ஆகும். இந்தத் தலைவலி இந்தியாவிற்கு 1970-களில் இருந்து பல ஆண்டு காலமாக நீடித்து வருகிறது. இதன் விளைவாக தான் ஆபரேஷன் ப்ளூ ஸ்டார், இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் இறப்பு போன்ற சம்பவங்கள் நடந்தேறின.

உலக அளவில் அதிக சீக்கிய மக்கள் தொகை கொண்ட நாடுகளில் இந்தியாவிற்கு அடுத்த இரண்டாவது இடத்தை பிடித்துள்ள நாடு கனடா. இந்தியாவில் காலிஸ்தான் தனி நாடு குரல் எழுந்தப்போதே, கனடாவில் இருந்த சீக்கிய மக்களிடம் இருந்து அதற்கு பெரும் ஆதரவு கிடைத்தது. இந்த ஆதரவு நிதி உதவியாகவும் நீண்டது.
அந்த சீக்கியர்களின் ஆதரவும், உதவியும் இந்தியாவிற்கு மிகப் பெரிய தொல்லையாக இருந்தாலும், இந்தியாவால் அவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. காரணம், கனடாவின் சட்ட அமைப்பு.
கனடா நாட்டில் இருந்துகொண்டு இன்னொரு நாட்டில் பிரச்னை ஏற்படுத்துபவர்களை, அந்த நாட்டிற்கு அனுப்பவதற்கான வலுவான சட்டம் கனடாவில் இல்லை.
அதனால், அவர்களுக்கு எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. இந்தியாவில் காலிஸ்தான் பிரச்னை கிளப்பி சட்ட சிக்கலில் மாட்டிக்கொண்டவர்கள் கூட கனடாவிற்கு தப்பி ஓடினார்கள்.
இதனால், காலிஸ்தான் கோரிக்கை கனடாவில் மிகுந்த வலுவுடன் ஒலிக்கிறது.
கனடாவில் உள்ள அனைத்து சீக்கியர்களும் காலிஸ்தான் கோரிக்கையை முன்வைக்கிறார்களா என்று பார்த்தால், 'இல்லை'.
பலர் 'தான் உண்டு, தன் வேலை உண்டு' என்று தான் இருக்கிறார்கள். இதை கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவே உறுதிப்படுத்தியிருக்கிறார்.
ஆனால், கனடாவில் சில சீக்கியர்கள் வலுவாக முன்னெடுக்கும் காலிஸ்தான் கோரிக்கை கனடாவில் இருக்கும் ஒட்டுமொத்த சீக்கியர்களின் கோரிக்கையாக தெரிகிறது.
இப்போது நடைபெற்று முடிந்துள்ள கனடா தேர்தலில், மார்க் கார்னி பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்... லிபரல் கட்சியின் தலைவராகவும் பொறுப்பேற்றுள்ளார்.
மார்க் கார்னி அடிப்படையில் ஒரு பொருளாதார நிபுணர் மற்றும் வங்கியாளர். கனடா மத்திய வங்கியின் ஆளுநராக பணியாற்றி உள்ள இவருக்கு அனைத்தை விடவும், கனடாவின் பொருளாதாரம் மிக முக்கியம்.
கொரோனா பேரிடரின் போது, கனடா அரசின் தவறான கொள்கைகளினால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளில் இருந்து கனடா மக்கள் இன்னும் மீளவில்லை.
இப்போதைக்கு கனடா மக்களின் தேவை அவர்களது பொருளாதார நிலையை சரிப்படுத்த வேண்டும் என்பது தான்.
இன்னொரு பக்கம், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கனடாவை அமெரிக்காவின் 51-வது மாகாணமாக மாற்றிவிடுவேன் என்று கூறி வருகிறார். இது கனடா மக்களுக்கு பிடிக்கவில்லை.
அதனால், மேலே கூறிய இரண்டையும் சரி செய்யும், எதிர்கொள்ளும் பிரதமரை எதிர்பார்த்தார்கள். அதன் விளைவு தான், 'மார்க் கார்னி பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது'.

ஜக்மீத் சிங்கின் நியூ டெமாகிரிட்டிக் கட்சி பழைமைவாத கொள்கையை கொண்டது. இது கிட்டதட்ட ட்ரம்ப்பின் கொள்கைக்கு ஒத்தது ஆகும்.
கனடா மக்கள் எதிர்பார்த்தது பொருளாதார சரிசெய்தலும், ட்ரம்பை சரிகட்டுதலும் தான். ஆனால், இந்த இரண்டையும் நியூ டெமாகிரிட்டிக் பூர்த்தி செய்வார்கள் என்று கனடா மக்கள் நினைக்கவில்லை. அதனால் தான், நியூ டெமாக்ராட்டிக் கட்சிக்கு குறைந்த இடங்களை அளித்திருக்கிறார்கள் மக்கள்.
மேலே சொன்னதுப்போல, மார்க் கார்னி பொருளாதார நிபுணர். அவருக்கு நாட்டின் பொருளாதாரம் தான் மிக முக்கியம். காலிஸ்தானுக்கு ஆதரவான நிலைபாட்டை எடுத்து அவர் இந்தியாவை பகைத்துக் கொள்ள நினைக்கமாட்டார் என்கிறார்கள் சர்வதேச அரசியல் வல்லுநர்கள். காரணம், இந்தியா கனடாவின் ஒன்பதாவது பெரிய ஏற்றுமதிச் சந்தை ஆகும்.
மேலும், இந்தியா - கனடா உறவு பொருளாதாரத்தோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. இந்த இரு நாடுகளும் வரலாற்று ரீதியாகவும், மக்கள் ரீதியாகவும் பல ஒற்றுமைகளை கொண்டது ஆகும். இரு நாடுகளுக்கும் இடையே பல ஒப்பந்தங்களும், நட்புறவும் உண்டு.
அதனால், அவை அனைத்தையும் பகைத்துகொள்ள மார்க் கார்னி விரும்பமாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கார்னி தனது தேர்தல் பிரசாரத்தின் போதே, 'இந்தியா மாதிரி கனடா உடன் ஒத்த சிந்தனை உடைய நாடுகளுடன் கனடா பொருளாதார பிணைப்புகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்' என்று பேசியிருந்தார்.
இதில் இருந்தே அவரின் பார்வை தெளிவாகிறது.

மேலும், மார்க் கார்னி இந்தத் தேர்தல் பிரசாரம் முதலே ஜஸ்டின் ட்ரூடோவின் நிழலைக் கூட தள்ளியே வைத்திருக்கிறார். காலிஸ்தான் விஷயத்தில் ட்ரூடோ செய்ததை இவர் தொடரமாட்டார் என்றே தெரிகிறது.
நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளின் படி, ஜக்மீத் சிங்கின் செல்வாக்கு தேர்தல் தோல்வியுடனே நின்றுவிட்டது. அதனால், அவரால் மார்க் கார்னியின் நிர்வாகத்தில் தலையிட முடியாது.
காலிஸ்தான் ஆதரவாளர் நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்தியா பெயரை உட்படுத்தியதும், அதுவும் இந்தியாவின் மீது அப்போதைய கனடா பிரதமரே குற்றம் சாட்டியதும் இந்தியாவிற்கு உலக அரங்கில் நிச்சயம் மிகப்பெரிய அவமானம்.
அடுத்ததாக, காலிஸ்தான் என்பது இந்தியாவிற்கு மிகப் பெரிய பிரச்னை.
ஆக, இந்தியா எந்த முடிவையும் சட்டென எடுத்துவிடாது என்றே தெரிகிறது.
கார்னி இந்தியா உடனான உறவை எப்படி கொண்டு செல்கிறார்... காலிஸ்தான் விஷயத்தில் கார்னியின் நிலைபாடு என்ன என்பதை பொறுத்து தான் இந்தியா காய்கள் நகர்த்தும்.

ஜக்மீத் சிங்கால் மட்டும் கனடாவில் காலிஸ்தான் கோரிக்கை எழவில்லை. அந்தக் கூட்டத்தில் அவரும் ஒரு முக்கியஸ்தர்.
இவர் ஒருவர் தோல்வியால் கனடாவின் காலிஸ்தான் ஆதரவாளர்கள் குறைந்துவிட மாட்டார்கள். என்ன இவரது தோல்வியால், காலிஸ்தான் கோரிக்கையும், அதன் தலையீடும் கனடாவின் ஆட்சி நிர்வாகத்தில் குறையுமே தவிர... வேறு ஒன்றும் பெரிதாக நடந்துவிடாது.
அவர்களின் போராட்டமும், தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். ஆனால், அவர்களின் தலையீடுகள் நிர்வாகத்தில் இருக்காது.
ஆனால், இதுவும் மார்க் கார்னியின் அடுத்தடுத்த நிர்வாகக் கொள்கையை பொறுத்தே அமையும்!