"அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் வர்த்தக விவகாரம் வரவில்லை" - ட்ரம்ப் கூற்றுக்கு இந்தியா மறுப்பு
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்குப் (ஏப்ரல் 22) பதிலடியாக இந்திய ராணுவம், மே 7-ம் தேதி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் தீவிரவாத முகாம்கள் மீது `ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor)' என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது.
அடுத்தநாளே, ஜம்மு காஷ்மீர் மீது ட்ரோன் தாக்குதல் நடைபெற, இந்திய ராணுவமும் பாகிஸ்தான் மீது எதிர் தாக்குதலில் ஈடுபட்டது. இதனால், இருநாடுகளுக்கும் இடையே மோதல் அதிகரிக்கவே, அமெரிக்கா இதில் தலையிட்டது.

பின்னர், இந்தியாவும் பாகிஸ்தானும் மோதலை நிறுத்த ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிக்க (மே 10), அதன்பிறகு இருநாட்டு தரப்பிலிருந்தும் ட்ரம்பின் கூற்றை வழிமொழியும் தொனியில், "மோதலை நிறுத்த முடிவெடுத்திருக்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டது.
இதனால், "ட்ரம்ப் எப்படி மோதல் நிறுத்தத்தை அறிவிக்கலாம்? அமெரிக்கா ஏன் தலையிட்டது?" என்று கேள்விகள் எழுந்தன.
அதற்கேற்றாற்போலவே, மோதலை நிறுத்தாவிட்டால் வர்த்தகம் கிடையாது என எச்சரித்ததால் இருநாடுகளும் மோதலை நிறுத்த ஒப்புக்கொண்டதாக மே 12-ம் தேதி ட்ரம்ப் வெளிப்படையாகப் பேசினார்.
ட்ரம்ப் அதோடு நிற்காமல் நேற்று (மே 13) சவுதி அரேபியாவிலும், "இந்திய - பாகிஸ்தான் இடையே அதிகரித்த மோதலைத் தடுக்க வர்த்தகத்தைப் பெருமளவில் நான் பயன்படுத்தினேன். ஒரு டீல் போடுவோம், சில வர்த்தகம் செய்வோம் என்று சொன்னேன் மோதல் எல்லாம் நிறுத்தப்பட்டது" என்று கூறினார்.
பிரதமர் மோடியும், ட்ரம்பின் இத்தகைய பேச்சு குறித்து எதுவும் வாய்திறக்கவில்லை.

இந்த நிலையில், பாகிஸ்தானுடன் மோதல் நிறுத்த விவகாரத்தில் முதல்முறையாக ட்ரம்பின் கூற்றை மேலோட்டமாக மறுக்கும் வகையில், "ஜம்மு காஷ்மீர் தொடர்பான எந்தவொரு பிரச்னையையும், இந்தியாவும் பாகிஸ்தானும் இருதரப்பு ரீதியாகவே தீர்க்கும் என்ற நீண்டகால தேசிய நிலைப்பாட்டை இந்தியா கொண்டிருக்கிறது.
அந்தக் கொள்கையில் எதுவும் மாறவில்லை. பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள இந்தியப் பகுதியை விடுவிப்பதே இதில் நிலுவையிலிருக்கும் விஷயம்.

மே 7-ம் தேதி ஆபரேஷன் சிந்தூர் தொடங்கியதிலிருந்து மே 10-ம் தேதி ராணுவ நடவடிக்கையை நிறுத்துவது வரை, அதிகரித்து வரும் ராணுவ நிலைமை குறித்து இந்திய மற்றும் அமெரிக்கத் தலைவர்களிடையே உரையாடல்கள் நடந்தன.
இந்தப் பேச்சுவார்த்தை எதிலும் வர்த்தக விவகாரம் வரவில்லை." என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.