Vijayakanth: அம்மா அப்பா பேரை ஆசையா வச்சார் - 'ஆண்டாள் அழகர்' கல்லூரி குறித்து விஜயகாந்த் ரசிகர்கள்
சென்னையை அடுத்த மாமண்டூரில் மறைந்த நடிகரும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனருமான விஜயகாந்த் நிறுவிய ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியை வேறொரு கல்விக் குழுமத்திற்கு விற்பனை செய்திருக்கிறார்கள் விஜயகாந்த் குடும்பத்தினர்.
பெரம்பலூரைத் தலைமையிடமாக் கொண்டு இயங்கி வரும் தனலட்சுமி ஶ்ரீனிவாசன் கல்விக் குழுமம் ஆண்டாள் அழகர் கல்லூரியை வாங்கியிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது.
கடந்த சில ஆண்டுகளாகவே கல்லூரியை நிர்வகிப்பதில் சிரமங்களைச் சந்தித்து வந்ததாலேயே இப்படியொரு முடிவை விஜயகாந்த் குடும்பம் எடுத்ததாகத் தெரிய வருகிறது. சுமார் 150 கோடி ரூபாய் அளவுக்கு கொடுத்து விஜய்காந்தின் கல்லூரியை தனலட்சுமி ஶ்ரீனிவாசன் கல்விக் குழுமம் வாங்கியிருக்கலாமென்கிறது முன்னணி ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்று.

கல்லூரி கை மாறியது தொடர்பாக தேமுதிக நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம்.
''கேப்டன் நினைச்சிருந்தா சினிமாவுல சம்பாதிச்சதை முதலீடா போட்டு ஏகப்பட்ட கல்வி நிறுவனங்களை உருவாக்கியிருக்கலாம். முன்னாள் அரசியல்வாதிகள் சிலர் இப்ப நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் வச்சிருக்காங்களே, அப்படி இவர்கிட்டயும் இருந்திருக்கும். ஆனா அப்படிச் சம்பாதிக்க அவர் விரும்பல.
அவர் சினிமாவுல உச்சத்துல இருந்தப்ப, அவர்கிட்ட எத்தனையோ பேர் இந்த ஐடியாவைச் சொல்லியிருக்காங்க. 'அடப் போங்கப்பா, அரசாங்கம் கல்வியை இலவசமாத் தரணும்னு சொல்லிட்டிருக்கேன். நாளைக்கு கட்சி ஆரம்பிச்சா, அதைத்தான் நாம் வலியுறுத்தணும். தவிர படிப்பை வியாபாரமா ஆக்கறதுல எனக்கு உடன்பாடில்ல. முடிஞ்சா நாலு பேரைப் படிக்க வைக்கணும், அதை விட்டுட்டு காலேஜ் தொடங்குறேன், சம்பாதிக்கறேன்னு இறங்கறதுக்கு நான் ஆள் இல்லை'ன்னு அவங்ககிட்டச் சொன்னவர்.
இருந்தும் மனைவி மற்றும் குடும்பத்தினரின் தொடர்ச்சியான வற்புறுத்தலாலேயே ஆண்டாள் அழகர் கல்லூரியைத் தொடங்கினார். அப்பவுமே 'என் அப்பா அம்மா பேரை வைக்கிறேன், அதனால குறிப்பிட்ட ஒரு சதவிகிதமாச்சும் கட்சிக்காரங்க, ரசிகர்கள், பொதுமக்கள்ல ரொம்ப கஷ்டப்பட்டவங்களுக்குப் பயன்படுகிற மாதிரி அனுமதிக்கணும்' எனக் கறாராகச் சொல்லியிருந்தார்.
கல்லூரி நிர்வாகத்தை அவரது மச்சினன் சுதீஷ்தான் கவனிச்சுக்கிட்டார். ஆனாலும் ஆரம்பிச்ச புதுசுல சில வருஷம் விஜயகாந்த் நினைச்ச மாதிரியே நடந்தது. கட்சி நிர்வாகிகள்ல கஷ்டப்பட்ட சிலர் தங்களது பிள்ளைகளை அங்க படிக்க வச்சு பலனடைஞ்சாங்க. ஆனா போகப் போக சூழல் மாறுச்சு.

கல்லூரி விஷயங்கள்ல அவர் தலையிடாதது நிர்வகிச்சவங்களுக்கு ரொம்பவே வசதியா போச்சு. ஒருகட்டத்துல கேப்டன் சிபாரிசையே அங்க கண்டுக்காததும் நடந்தது. அதாவது இவர் சொல்லிட்டா, 'அந்த சீட் நேத்துதானே முடிஞ்சது'ங்கிற ரீதியில ஒரு பதிலைத் தருவாங்க, அல்லது வேண்டா வெறுப்பா ஏதாவதொரு சீட்டைக் கொடுப்பாங்க.
இந்த மாதிரியான அனுபவங்களைச் சந்திச்ச நிர்வாகிகளும் இருக்காங்க. அதேநேரம் அவர் மனைவி பிரேமலதா மூலம் போனா குறிப்பிட்ட சதவிகிதம் கட்டணச் சலுகை கிடைச்சதும் நடந்தது'' என்கிறார்கள் இவர்கள்.

விஜயகாந்தின் ஆரம்ப கால சினிமா நண்பர் ஒருவரிடம் பேசியபோது,
``அவருக்குப் படிக்க வசதி இருந்தது. ஆனா சினிமா ஆசையில் அவர் படிக்காம விட்டுட்டார். ஆனா படிக்க நினைச்சும் வசதி இல்லாம இருக்கிறவங்களைப் பத்தின கவலை அவருக்கு இருந்தது. அதனாலேயே தன்னுடைய பிறந்தநாள் வந்தா ஏழைக் குழந்தைகள், மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்குக் கல்வி தருகிற நிறுவனங்களுக்கு டொனேஷன் தர்றதை வழக்கமா வச்சிருந்தார். கல்லூரி ஆரம்பிச்சப்ப ஆசை ஆசையா அப்பா அம்மா பேரை கல்லூரிக்கு வச்சார். இப்ப கல்லூரி கை மாறிடுச்சுனு கேக்கறப்ப ரொம்பவே வருத்தமா இருக்கு. அவருடைய குடும்பத்தினர் நினைச்சிருந்தா அவர் ஆசைப்படியே கல்லூரியை நடத்தியிருந்திருக்கலாம்' என ரொம்பவே ஆதங்கப்படுகிறார்.