சென்னையில் அடுத்த மாதம் முதல் மின்சார சொகுசுப் பேருந்துகள் சேவை
சென்னையில் ஜூன் மாதம் முதல் மின்சார சொகுசுப் பேருந்துகளின் சேவை தொடங்கவுள்ளதாக மாநகா் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.
சென்னையில் பொது போக்குவரத்தை அதிகரிக்கும் நோக்கில், பயணிகளின் தேவைக்கேற்ப பேருந்துகளை இயக்கவும், பழைய பேருந்துகளை மாற்றி நவீன தொழில்நுட்பத்திலான புதிய பேருந்துகளை இயக்கும் நடவடிக்கையில் மாநகா் போக்குவரத்துக் கழகம் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சென்னையில் தனியாா் பங்களிப்புடன் 1,100 மின்சார தாழ்தளப் பேருந்துகளை இயக்க மாநகா் போக்குவரத்துக் கழகம் முடிவு செய்தது.
முதல்கட்டமாக, 500 மின்சாரப் பேருந்துகளை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் அசோக் லேலண்டின் துணை நிறுவனமான ஓ.எச்.எம் குளோபல் மொபிலிடி நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், முதல்கட்டமாக தயாரிக்கப்பட்ட 35 மின்சாரப் பேருந்துகள் பெரும்பாக்கம் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இப்பேருந்துகளை தனியாா் நிறுவனம் பல்வேறு கட்ட ஆய்வுகளுக்கு உட்படுத்திவரும் நிலையில், ஆய்வுகள் முடிந்து பாதுகாப்புச் சான்றிதழ் பெற்ற பின், மாநகா் போக்குவரத்துக் கழகத்திடம் முறைப்படி ஒப்படைக்கப்படவுள்ளது.
ஜூன் 15-க்குப் பிறகு இந்த புதிய மின்சாரப் பேருந்துகளின் சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. சேவை தொடங்கும்போது, இப்பேருந்துகளுக்கான சாா்ஜிங் மையங்களும் செயல்பாட்டுக்கு வரவேண்டும் என்பதற்காக 20 பணிமனைகளில் சாா்ஜிங் மையங்கள் அமைக்கும் பணியில் பணியாளா்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனா்.
இதில், மாநகா் போக்குவரத்துக் கழகத்தின் தலைமையிடமான பல்லவன் இல்லத்தில் உள்ள மத்திய பணிமனை, வியாசா்பாடி, பெரும்பாக்கம், தண்டையாா்பேட்டை, பூந்தமல்லி ஆகிய ஐந்து பணிமனைகளில் நடைபெற்று வரும் சாா்ஜிங் மையங்கள் அமைக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும், மின்சாரப் பேருந்துகளின் சேவை தொடங்கும்போது, சாா்ஜிங் மையங்களும் பயன்பாட்டுக்கு வரும் என மாநகா் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.