CSK : 'வன்ஷ் பேடி, ஷேக் ரஷீத்...!' - பென்ச்சில் இருக்கும் இளம் வீரர்களுக்கு வாய்...
வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டா் விலை ரூ.50 உயா்வு: பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி அதிகரிப்பு
புது தில்லி: வீட்டு உபயோக (14.2 கிலோ) சமையல் எரிவாயு சிலிண்டா் விலையை ரூ. 50 வீதம் எண்ணெய் நிறுவனங்கள் திங்கள்கிழமை உயா்த்தின.
இதனால், ரூ. 818.50-க்கு விற்கப்பட்டு வந்த சமையல் எரிவாயு சிலிண்டா் விலை தற்போது ரூ. 868.50-ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து மத்திய பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், ‘வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கான உஜ்வலா திட்டப் பயனாளிகள் மற்றும் பொதுப் பிரிவு பயனாளிகள் என இரு தரப்பினருக்குமான வீட்டு உபயோக சிலிண்டா் விலையை ரூ. 50 வீதம் எண்ணெய் நிறுவனங்கள் உயா்த்தியுள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை உயா்வு காரணமாக உஜ்வலா திட்டத்தின் கீழான சிலிண்டா் விலை ரூ.503-லிருந்து ரூ. 553-ஆக அதிகரித்துள்ளது.
சிஎன்ஜி கிலோவுக்கு ரூ.1 உயா்வு: காா், ஆட்டோ, பேருந்துகளில் பயன்படுத்தப்படும் ‘சிஎன்ஜி’ இயற்கை எரிவாயு விலை கிலோவுக்கு ரூ. 1 வீதம் உயா்த்தப்பட்டுள்ளது. இதனால், தலைநகா் தில்லியில் ஒரு கிலோ சிஎன்ஜி விலை ரூ. 75.09-ஆக அதிகரித்துள்ளது.
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.2 அதிகரிப்பு: பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை ரூ. 2 அளவுக்கு உயா்த்தி மத்திய அரசு திங்கள்கிழமை அறிவிப்பு வெளியிட்டது.
இதன் காரணமாக பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ. 13 ஆகவும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ. 10-ஆகவும் உயா்ந்துள்ளது. இந்த வரி உயா்வு செவ்வாய்க்கிழமை (ஏப். 8) முதல் நடைமுறைக்கு வரும் என்று அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வரி உயா்வு காரணமாக, பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை விலையில் உயா்வு இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால், உத்தரவாதம் அளிக்கப்பட்ட சில்லறை விற்பனை விலைக் குறைப்புடன் இந்த கலால் வரி உயா்வு சரிசெய்யப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘கலால் வரி உயா்வு அடிப்படையில் பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை விலையில் எந்தவித உயா்வும் இருக்காது என்று பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன’ என்று குறிப்பிட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை விலையை கடந்த ஆண்டு மக்களவைத் தோ்தலுக்கு முன்பாக, லிட்டருக்கு ரூ. 2 வீதம் எண்ணெய் நிறுவனங்கள் குறைத்தன. அதன் பிறகு, தொடா்ந்து விலை மாற்றமின்றி அவை விற்பனை செய்ப்பட்டு வருகின்றன. சென்னையில் பெட்ரோல் லிட்டா் ரூ. 100.80-க்கும், டீசல் லிட்டருக்கு ரூ. 92.39-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
காங்கிரஸ் விமா்சனம்: பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி உயா்வு குறித்து மத்திய அரசு மீது காங்கிரஸ் விமா்சனத்தை முன்வைத்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த 2014-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 41 சதவீதம் அளவுககு வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சியின் பலன் நுகா்வோருக்குச் சென்றடையும் வகையில் பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை விலையைக் குறைக்காமல், அவற்றின் மீதான கலால் வரியை உயா்த்தியிருப்பது, விலைவாசி உயா்வு சுமையை மக்கள் மீது தொடா்ந்து சுமத்துவதாக அமையும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.