தேசிய தொழில்நுட்ப ஜவுளித் திட்டத்தின் கீழ் புதுமையான சுயசாா்பு தீ பாதுகாப்பு உடை
பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதல்வர்! ஒப்புதல் பெற்ற 10 மசோதாக்களில் இருப்பது என்ன?
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்கள் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக உச்ச நீதிமன்றம் தன்னுடைய சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி தீர்ப்பளித்திருக்கும் நிலையில், பல்கலைக்கழகங்களின் வேந்தராகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பத்து மசோதாக்கள், ஆளுநர் ஆர்.என். ரவிக்கு ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அவர் அதனை கிடப்பில் வைத்திருப்பதாகக் கூறி தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று அதிரடித் தீர்ப்பை வழங்கியதோடு, பல முக்கிய உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளது.
உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், மாநில பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களை கிடப்பில் வைக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை. எனவே, மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிய தேதிகளிலிருந்து, மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி உத்தரவிடுவதாக உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பினால், இதுவரை நிலுவையில் இருந்த 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் கிடைத்திருக்கிறது. அந்த பத்து மசோதாக்களில் பல்கலை துணைவேந்தர் நியமனம் உள்ளிட்ட பல முக்கிய மசோதாக்களும் உள்ளன. அதன்படி,
பல்கலை வேந்தராகிறார் தமிழக முதல்வர்
தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை ஆளுநர் மூலம் நியமனம் செய்யாமல், மாநில அரசே நியமிப்பதற்கான புதிய சட்ட மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு ஒப்புதல் கிடைத்துள்ளது.
இதனால், பல்கலை துணைவேந்தர்களை ஆளுநரே நியமனம் செய்து வந்த நிலையில், துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்யலாம். இதன் மூலம், தமிழக முதல்வரே பல்கலை. வேந்தராகிறார் என்று கூறப்படுகிறது.
சித்த மருத்துவ பல்கலை.
இந்திய மருத்துவ முறைகளுக்கான தனி சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் தமிழகத்தில் தொடங்குவதற்கான சட்டமசோதாவை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியின் பேரவையில் கொண்டுவந்தார். இந்த சட்ட மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டிருந்தது. இதில், சித்த மருத்துவப் பல்கலைக்கழகத்தின் வேந்தராக முதல்வரும், துணைவேந்தராக மருத்துவத் துறை அமைச்சரும் இருப்பர் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மசோதாவுக்கும் ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளது.
இதனுடன் தமிழ்நாடு மீன்வளப் பல்கலை.யை ஜெ. ஜெயலலிதா பல்கலை. என பெயர் மாற்றம் செய்யும் மசோதாவுக்கும் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.