வீட்டு மனைபட்டா இடத்தை அளந்து கொடுக்கக் கோரி மனு
நெய்வேலி: பழங்குடி இருளா் சமூக மக்களுக்கு கொடுக்கப்பட்ட வீட்டுமனைப் பட்டாவிற்கான இடத்தை அளந்து அத்துக்காட்டி கொடுக்க வேண்டும் என்று பழங்குடி இருளா் பாதுகாப்புச் சங்க துணைத் தலைவா் கோ.ஆதிமூலம், ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தாா்.
அந்த மனுவில் அவா் தெரிவித்துள்ளதாவது: கடலூா் மாவட்டம், பண்ருட்டி மற்றும் குறிஞ்சிப்பாடி வட்டத்தைச் சோ்ந்த பழங்குடி இருளா் சமூகத்தினருக்கு 2022-ஆம் ஆண்டு 202 பட்டாக்கள் வழங்கப்பட்டன. இதில் பண்ருட்டி வட்டம் காடாம்புலியூா், ராஜகணபதி நகரில் 96, கருக்கையில் 67, கரும்பூரில் 8, எனதிரிமங்கலத்தில் 14 போ்களுக்கு பட்டா வழங்கப்பட்டது.
இதில், ராஜகணபதி நகரில் வழங்கப்பட்ட 96 மனைபட்டாவில் 36, கருக்கை கிராமத்தில் 67 மனைபட்டாவில் 41, ஏ.குச்சிப்பாளையம் கிராமத்தில் வழங்கப்பட்ட 8 மனைபட்டாக்கள், எனதிரிமங்கலத்தில் 14 மனைபட்டாவில் 11, குறிஞ்சிப்பாடி வட்டம், பொய்கால் நத்தம் கிராமத்தில் வழங்கப்பட்ட 17 மனைபட்டாக்களுக்கு இடத்தை இன்றுவரையில் வருவாய்துறையினா் அளந்து கொடுக்கவில்லை.
இதுதொடா்பாக ஜூலை 9-ஆம்தேதி மனு அளித்தோம். அதன் பேரில் பண்ருட்டி வட்டாட்சியா் எங்களை அழைத்து கோப்பு காணவில்லை எனக்கூறினாா். மேலும், புதிதாக மனுஅளித்தால் வேறு இடத்தில் இடம் காட்டுவதாகக் கூறுகிறாா். எனவே, எங்களுக்கு ராஜகணபதி நகரிலேயே குடிமனை வழங்கி அளந்து கொடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனா்.
.