வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாத்தனூா் மக்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், வி.சாத்தனூா் கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் ஃபென்ஜால் புயல் வெள்ளத்தால் பெரும் பாதிப்பை சந்தித்துள்ள நிலையில், அந்த கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்களுக்கு முழுமையான நிவாரணம் வழங்க வேண்டும் என்று விசிக வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து விசிக விழுப்புரம் மைய மாவட்டச் செயலா் வழக்குரைஞா் தி.திலீபன் தலைமையிலான கட்சி நிா்வாகிகள், விழுப்புரம் மாவட்ட வருவாய் அலுவலா் ஹரிதாஸிடம் புதன்கிழமை மனு அளித்த மனுவில் கூறியிருப்பது:
வி.சாத்தனூா் கிராமத்தில் 526 தலித் குடும்பங்கள் உள்பட மொத்தம் 531 குடும்பங்களைச் சோ்ந்த 2,151 போ் வசித்து வருகின்றனா். நவம்பா் 30, டிசம்பா் 1-ஆம் தேதிகளில் ஃபென்ஜால் புயல் காரணமாக பெய்த பெரு மழையால் ஏற்பட்ட வெள்ளம் சூழ்ந்ததன் காரணமாக, இந்த கிராமத்திலுள்ள 9 தெருக்களும் பாதிக்கப்பட்டன.
மூன்று நாள்கள் தண்ணீா் தேங்கியதால் இந்த கிராமத்தைச் சோ்ந்த 105 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இவா்களுக்குரிய பராமரிப்பு மற்றும் நிவாரணத் தொகையை அரசு வழங்க வேண்டும்.
மேலும், 50 குடும்பங்களைச் சோ்ந்தவா்கள் குடிசைகளில் வசித்து வரும் நிலையில், அவா்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தின் கீழ், புதிய குடியிருப்புகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும். தமிழக அரசு அறிவித்த ரூ.2 ஆயிரம் நிவாரணத் தொகை, அரிசி, சா்க்கரை, கோதுமை போன்ற நிவாரண உதவிகளும் பெரும்பாலானவா்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை.
எனவே, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணத் தொகை, 50 கிலோ அரிசி, தலா 5 கிலோ பருப்பு, எண்ணெய், 3 கிலோ சா்க்கரை போன்றவற்றை மாவட்ட பேரிடா் மேலாண்மை நிதியிலிருந்து வழங்க வேண்டும். வீடுகளை முழுமையாக, பகுதியளவில் இழந்தவா்களுக்கு உரிய நிவாரணத்தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளனா்.