வெள்ளநீரில் மிதக்கும் விழுப்புரம்! மீட்புப்பணிகள் தீவிரம்!
விழுப்புரம்: ஃபென்ஜால் புயல் காரணமாக, கொட்டித் தீர்த்த மழையால் விழுப்புரம் நகரிலும், நகரையொட்டியுள்ள குடியிருப்புப் பகுதிகளிலும் வெள்ளநீர் சூழ்ந்துள்ள நிலையில், நீரை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மோடார் மூலம் வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்றது.
வங்கக்கடலில் உருவான ஃபென்ஜால் புயல் கரையைக் கடந்த போதும், அதன் பின்னரும் விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்தது. சனிக்கிழமை பிற்பகலில் தொடங்கிய மழை ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ந்து பெய்ததால் மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளான மரக்காணம், கோட்டக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் பெரும் பாதிப்புக்குள்ளாகின. மரங்கள் சாய்ந்து விழுந்த நிலையில் அவற்றை பணியாளர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் நகரில் கொட்டித் தீர்த்த மழையால் புதிய பேருந்து நிலையப் பகுதி முழுவதும் வெள்ளக்காடாக மாறியது. பேருந்து நிலையத்தில் வெள்ள நீர் முழுமையாக தேங்கியதால் பேருந்துகள் அனைத்தும் பேருந்து நிலையத்துக்கு வெளியே நிறுத்தப்பட்டன.
விழுப்புரம் நகராட்சி மற்றும் பிற நகராட்சிகள், திருச்சி உள்ளிட்ட மாநகராட்சிகளிலிருந்து வரவழைக்கப்பட்ட பணியாளர்களைக் கொண்டு மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
விழுப்புரம் வழுதரெட்டி ஏரியில் தண்ணீர் நிரம்பியதால் அங்கிருந்து வெளியேறிய மழைநீர் பாண்டியன் நகர், ஆடல் நகர், குழந்தைவேல் நகர், ஜெகநாதன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளை சூழ்ந்தது.
ஞாயிற்றுக்கிழமை காலையிலிருந்து மாலை வரை தொடர்ந்து மழை பெய்ததால் தண்ணீர் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், இரவு மழைநின்ற பின்னரே குறையத் தொடங்கியது. இதன் காரணமாக இந்த பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பை சந்தித்து வருகின்றன. உதவி தேவைப்படுவர்களுக்கு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் படகுகள் மூலம் சென்று அவர்களை மீட்டு பாதுகாப்பு மையங்களுக்கு அனுப்பி வைத்தனர்.
இதுபோன்று மாவட்ட ஆட்சியரகம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளிட்ட பிற பகுதிகளில் தேங்கிய வெள்ளநீர் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகப் பகுதி முன் தேங்கியது. இதனால் ஆட்சியரகத்துக்குள் பொதுமக்கள் யாரும் வரமுடியாத நிலை ஏற்பட்டது. இந்த பகுதியிலும் மோட்டார் மூலம் வெள்ளநீர் வெளியேற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்துக்கு எதிரிலுள்ள சுதாகர் நகர், கலைஞர் நகர், கே.கே.சாலை வழியாக கடந்து செல்லும் மழைநீர் சாலாமேடு ஏரிக்குத் தொடர்ந்து செல்கிறது. இதனால் இப்பகுதிகளிலும் தண்ணீர் முழுமையாக தேங்கியிருப்பதால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.
மேலும் விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையில் கணேஷ் நகர், தேவநாதசுவாமி நகர், கம்பன் நகர் உள்ளிட்ட பகுதிகள் மழைநீரால் சூழ்ந்து தீவு போல காணப்படுகிறது. இதனால் இந்த பகுதிகளிலுள்ள சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளைச் சேர்ந்த பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இதையும் படிக்க: விழுப்புரம் ரயில் நிலைய சந்திப்பிலிருந்து சிறப்புப் பேருந்துகள்
வீடுகளைச் சுற்றி தண்ணீர் தேங்கியிருப்பதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலையில் உள்ளனர். இதுபோன்று விழுப்புரம் முத்தோப்புப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக அப்பகுதியைச் சுற்றியுள்ள திடீர் நகர் போன்ற பகுதிகளும் மழைநீரால் சூழ்ந்துள்ளன.
இதுபோன்று விழுப்புரம் நகரின் அனைத்துப் பகுதிகளிலும் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளன. குறிப்பாக விரிவாக்கப் பகுதிகள் பெரும் சிக்கலை சந்தித்து வருகின்றன.
வெளி மாவட்டப் பணியாளர்கள் திங்கள்கிழமை காலையில் மழை இல்லாத நிலையில், மோட்டார் மூலம் வெள்ளநீரை வெளியேற்றும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விழுப்புரம் ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகம், புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மோட்டார் மூலம் வெள்ளநீரை வெளியேற்றும் பணியை பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்காக திருச்சி மாநகராட்சி உள்ளிட்ட பல்வேறு மாநகராட்சிகள், அரியலூர், மன்னார்குடி, திருச்செங்கோடு போன்ற பல்வேறு நகராட்சிகளிலிருந்து தூய்மைப் பணியாளர்கள், இதர நிலைப் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.