கோவை: மருதமலை, பேரூர் கோயில்களுக்கு கும்பாபிஷேகம் - தேதி வெளியிட்ட அமைச்சர் சேகர...
வெவ்வேறு மதங்கள்... திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளுக்கு தற்காலிக குடியிருப்பு - மகாராஷ்டிரா அரசு
ஒருவர் மாற்று மதத்தை சார்ந்தவரை திருமணம் செய்து கொண்டால் சமுதாயத்தில் கடுமையான சவால்களை சந்திக்கின்றனர். சில சமயங்களில் மத அமைப்புகள் கூட இதில் தேவையில்லாமல் தலையிட்டு பிரச்னையை ஏற்படுத்துகின்றன. அதோடு அத்தம்பதிகள் தாக்குதலுக்கு உள்ளாகிற சம்பவங்களும் நடக்கிறது. இதனால் அவர்களுக்கு போலீஸார் பாதுகாப்பு கொடுக்கவேண்டிய நிலை ஏற்படுகிறது. அதுவும் கோர்ட் மூலம் இந்த பாதுகாப்பை பெறவேண்டிய நிலையில் இத்தம்பதிகள் இருக்கின்றனர்.
இந்த நிலையில் மகாராஷ்டிராவில் அது போன்று வெவ்வேறு மதங்களை சேர்ந்த இருவர் திருமணம் செய்து கொள்ளும் பட்சத்தில் அவர்களுக்கு தற்காலிகமாக குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இது போன்ற தம்பதிகளுக்கு பாதுகாப்பு மிகவும் முக்கியமாக இருக்கிறது.
தம்பதிகளுக்கு பாதுகாப்பு கொடுக்கவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே உத்தரவிட்டு இருக்கிறது. எனவே பாதுகாப்பை கருத்தில் கொண்டு இது போன்ற தம்பதிகள் தங்க பாதுகாப்பான குடியிருப்புகளை ஏற்படுத்தும்படி மாநில உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில், ''வெவ்வேறு மதங்களை சேர்ந்த இருவர் திருமணம் செய்து கொண்டால் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க நகரங்கள், மாவட்டங்களில் போலீஸ் கமிஷனர்கள், கண்காணிப்பாளர்கள் தலைமையில் சிறப்பு பிரிவுகள் அமைக்கப்பட வேண்டும். அதோடு சம்பந்தப்பட்ட கமிஷனர்கள் மற்றும் சூப்பிரண்டண்ட்களின் பெயர்கள் இணையத்தளங்களில் இடம்பெறவேண்டும்.
இது போன்ற தம்பதிகளுக்காக 112 என்ற ஹெல்ப்லைன் தொடங்கப்பட்டுள்ளது. அதோடு இது போன்ற தம்பதிகள் பாதுகாப்பான முறையில் தங்குவதற்கு குடியிருப்புகளும் உருவாக்கப்படும். இந்த இல்லங்கள் அரசு விருந்தினர் மாளிகைக்குள் அமைக்கப்படும். மாவட்டத்திற்கு ஒரு குடியிருப்பாவது அமைக்கப்பட வேண்டும். அரசு குடியிருப்பில் இடம் காலியில்லை எனில் வாடகைக்கு தனியாக ஒரு இடத்தை தயார் செய்து கொடுக்கவேண்டும், அந்த இடத்திற்கான வாடகையை அரசு கொடுக்கும்” என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது போன்ற தம்பதிகளுக்கான தங்கும் வசதியை ஏற்பாடு செய்வது டி.ஜி.பி, கமிஷனர், மாவட்ட ஆட்சித்தலைவர், போலீஸ் சூப்பிரண்டண்ட் போன்றோரின் பொறுப்பும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.