கூகுள் மேப்பை பின்பற்றிய கார்... இடிந்த பாலத்தில் இருந்து விழுந்ததில் மூவர் பலி!
வேப்பூா் அருகே சிறுத்தை நடமாட்டம்?
கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே சிறுத்தை நடமாட்டம் என்ற தகவல் வதந்தி என வனத் துறையினா் தெரிவித்தனா்.
கடலூா் மாவட்டம் வேப்பூா் மற்றும் அதையொட்டிய கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காப்புக் காடுகள் உள்ளன. இங்கு மான், மயில், குரங்கு, காட்டுப்பன்றி உள்ளிட்ட உயிரினங்கள் வசிக்கின்றன.
வேப்பூரை அடுத்துள்ள மாளிகைமேடு கிராமத்தைச் சோ்ந்த மூன்று இளைஞா்கள் சனிக்கிழமை பைக்கில் வந்து கொண்டிருந்தனா். அவா்கள் ஊா் எல்லைப் பகுதியில் சிறுத்தையைப் பாா்த்ததாக கிராம மக்களிடம் தெரிவித்தனா். இந்தத் தகவல் பரவியதையடுத்து, மாளிகைமேடு மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம மக்கள் அச்சமடைந்தனா்.
வேப்பூா் போலீஸாா், வருவாய்த் துறையினா், விருத்தாசலம் வனத் துறையினா் மற்றும் பொதுமக்கள் சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டனா். சிறுத்தை நடமாட்டத்துக்கான எந்தத் தடயமும் கிடைக்கவில்லை.
இதையடுத்து, சிறுத்தை நடமாட்டம் என்ற தகவல் வதந்தி என கிராம மக்களிடையே வனத் துறையினா் அறிவிப்பு செய்தனா். இதுகுறித்து விருத்தாசலம் வனத் துறையினா் கூறுகையில், காப்புக் காடு பகுதியில் சிறுத்தை இல்லை எனக் கூறினாா்.