வைரல் விடியோ: விடுதலையின் போது ஹமாஸ் படையினருக்கு முத்தமிட்ட இஸ்ரேலிய பிணைக் கைதி!
பிணைக் கைதியாக பிடிக்கப்பட்ட இஸ்ரேலிய நபர் ஒருவர் தனது விடுதலையின் போது ஹமாஸ் படையினரின் நெற்றியில் முத்தமிடும் விடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படையினருக்கு இடையில் கையெழுத்தான காஸா மீதான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இஸ்ரேல் சிறைப்பிடித்துள்ள பாலஸ்தீனர்களின் விடுதலைக்கு இணையாக ஹமாஸ் கட்டுப்பாட்டிலுள்ள பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டு பரிமாற்றப்பட்டு வருகின்றனர்.
அதன் ஓர் பகுதியாக நேற்று (பிப்.22) பாலஸ்தீன அமைப்பான ஹமாஸ் படையினரின் கட்டுப்பாட்டில் கடந்த ஒன்றரை ஆண்டு பிணைக் கைதியாக இருந்த இஸ்ரேலியர்களான ஒமர் வென்கெர்ட், ஒமர் ஷெம் டோவ் மற்றும் இலியா கோஹன் ஆகியோர் சர்வதேச செஞ்சிலுவை இயக்கத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இந்த நிகழ்வுக்காக அமைக்கப்பட்டிருந்த மேடையில் துப்பாக்கி ஏந்திய ஹமாஸ் படையினரால் அழைத்து வரப்பட்ட அவர்கள் மூவருக்கும் அவர்களது விடுதலை சான்றிதழ்கள் வழங்கப்பட அவர்கள் அங்கு கூடியிருந்த மக்களை நோக்கி கையசைத்தனர்.
இதையும் படிக்க: டிரம்ப்-புதின் சந்திப்பு ஏற்பாடுகள் தீவிரம்: ரஷியா தகவல்
What they won’t show you in western media… pic.twitter.com/cCC4t2p83d
— War Monitor (@WarMonitors) February 22, 2025
இதனைத் தொடர்ந்து, விடுதலையடைந்த பிணைக் கைதிகளில் ஒருவரான ஒமர் ஷெம் டோவ் என்பவர் அவரது அருகில் முகமூடி அணிந்து கையில் துப்பாக்கி ஏந்தியிருந்த ஹமாஸ் படையினர் இருவரது நெற்றியிலும் முத்தமிட்டார். அப்போது, அங்கு கூடியிருந்த மக்கள் ஆராவாரத்துடன் கூச்சலிட்டனர். இந்த முழு சம்பவமும் விடியோவாக பதிவு செய்யப்பட்டு இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.
இதுகுறித்து, ஒமரின் உறவினர்கள் கூறியதாவது, எல்லோரிடமும் நட்போடு பழகுவது அவரது இயல்பு என்றும் ஹமாஸ் படையினர் உள்பட அனைவராலும் அவர் நேசிக்கப் படுகிறார் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
முன்னதாக, விடுவிக்கப்பட்ட மூன்று இஸ்ரேலியர்களும் ஹமாஸ் படையினரின் கட்டுப்பாட்டில் சுமார் 505 நாள்கள் கழித்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இணையத்தில் வைரலாகும் இந்த விடியோவை பகிர்ந்து வரும் இணையவாசிகள் இந்த செய்கையானது அமைதியின் சின்னம் என்றும் இந்த சிறிய செயலானது இருதரப்புக்கும் இடையில் என்றென்றும் அமைதியை நிலைநாட்ட வழி வகுக்கும் என்று குறிப்பிடுகின்றனர். ஆனால், சிலர் ஒமர் ஹமாஸ் படையினரின் நிர்பந்ததினால் மட்டுமோ இவ்வாறு செய்திருக்கக் கூடும் எனக் கூறி வருகின்றனர்.