திகிலில் Duraimurugan, Alert கொடுத்த Stalin! | Elangovan Explains
ஸ்பேடெக்ஸ் விண்கலங்களை ஒருங்கிணைக்கும் திட்டம் ஜன. 9-க்கு ஒத்திவைப்பு
பெங்களூரு: ஸ்பேடெக்ஸ் விண்கலங்களை ஒருங்கிணைக்கும் திட்டத்தை ஜன. 9-ஆம் தேதிக்கு இஸ்ரோ ஒத்திவைத்துள்ளது.
சா்வதேச விண்வெளி மையத்தை போல, இந்தியாவும் தனி விண்வெளி மையத்தை அமைக்க திட்டமிட்டு வருகிறது. அதுபோல, விண்ணுக்கு மனிதனை அனுப்பும் திட்டம், நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டம், நிலவில் இருந்து ஆய்வுமாதிரிகளை கொண்டுவருதல், இந்திய விண்வெளி மையம் அமைப்பது போன்ற விண்வெளி ஆய்வுத் திட்டங்களை இஸ்ரோ வகுத்துள்ளது. 2035-ஆம் ஆண்டுக்குள் இந்திய விண்வெளி மையத்தை அமைக்கும் திட்டமுள்ளது.
இதற்காக விண்வெளியில் இரு செயற்கைக் கோள்களை ஒருங்கிணைப்பதற்கு முன்னோட்டமாக, 2024 டிச. 30-ஆம் தேதி சேஸா் (எஸ்.டி.எக்ஸ்.01), டாா்கெட் (எஸ்.டி,எக்ஸ்.02) ஆகிய இரு விண்கலங்களை உள்ளடக்கிய ஸ்பேடெக்ஸ் விண்கலங்களை பி.எஸ்.எல்.வி. சி60 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இத்துடன் 24 ஆய்வுக் கருவிகளும் அனுப்பப்பட்டன.
தலா 220 கிலோ எடை கொண்ட இரு ஸ்பேடெக்ஸ் விண்கலங்கள், பூமியில் இருந்து 475 கி.மீ. சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. இந்த இரு விண்கலங்களையும் ஒருங்கிணைக்கும் ஸ்பேடெக்ஸ் (விண்வெளியில் விண்கலன்களை ஒருங்கிணைக்கும் ஆய்வுப் பணி) சோதனையை ஜன. 7-ஆம் தேதி மேற்கொள்ள இஸ்ரோ திட்டமிட்டிருந்தது. அந்த சோதனையை தரையில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் மேற்கொள்ள வேண்டும். ஆனால், தரைக் கட்டுப்பாட்டு மையத்தின் நிலைப்படுத்துதல் ஒப்புதல் இன்னும் பெற முடியாததால், இரு விண்கலங்களையும் ஒருங்கிணைக்கும் திட்டத்தை ஜன. 9-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
இதனை தனது எக்ஸ் தளத்தில் இஸ்ரோ உறுதிப்படுத்தியுள்ளது. இருவிண்கலங்களை ஒருங்கிணைக்கும் முயற்சி வெற்றிபெற்றால், விண்வெளியில் இருவிண்கலங்களை ஒருங்கிணைக்கும் தொழில்நுட்பத்தை பெற்றிருக்கும் உலகின் 4-ஆவது நாடாக இந்தியா சாதனை படைக்கும்.