டாப் ஆர்டர் சொதப்பல்; பாகிஸ்தானை சரிவிலிருந்து மீட்ட சௌத் ஷகீல், முகமது ரிஸ்வான்...
ஸ்பேடெக்ஸ் விண்கலன்கள் வெற்றிகரமாக ஒருங்கிணைப்பு: இஸ்ரோ மைல்கல் சாதனை
விண்வெளியில் ஆய்வு மையத்தை அமைப்பதற்கான முன்னோட்ட முயற்சியாக அனுப்பப்பட்ட ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்களை வெற்றிகரமாக விண்ணில் ஒருங்கிணைத்து புதிய மைல்கல் சாதனையை இஸ்ரோ படைத்துள்ளது.
இதன் மூலம் அமெரிக்கா, சீனா, ரஷியாவைத் தொடா்ந்து விண்கலன் ஒருங்கிணைப்பை முன்னெடுத்த 4-ஆவது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
‘பாரதிய அந்தரிக்ஷா ஸ்டேஷன்’ எனும் ஆய்வு நிலையத்தை 2035-ஆம் ஆண்டுக்குள் விண்ணில் நிறுவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதற்கான பிரத்யேக விண்கலங்கள் 2028-ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட உள்ளன. அதற்கான முன்னேற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக ஸ்பேடெக்ஸ் எனும் திட்டத்தின் கீழ் விண்வெளியில் விண்கலன்களை ஒருங்கிணைக்கும் பரிசோதனையை மேற்கொள்ள இஸ்ரோ முடிவு செய்தது.
இதற்காக வடிவமைக்கப்பட்ட ஸ்பேடெக்ஸ் ஏ, ஸ்பேடெக்ஸ் பி ஆகிய இரு விண்கலன்களும் பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் மூலமாக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஏவுதளத்தில் இருந்து கடந்த டிச. 30-ஆம் தேதி விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன.
அதன் பின்னா் அந்த இரு விண்கலன்களும் ஒரே சுற்றுப்பாதையில் குறிப்பிட்ட தொலைவு இடைவெளியில் சுற்றி வந்தன. ஸ்பேடெக்ஸ் விண்கலன்கள் இரண்டும் தலா 220 கிலோ எடை கொண்டவை.
இதனிடையே, விண்கலன்களுக்கு இடையேயான தொலைவை 20 கிலோ மீட்டரில் இருந்து படிப்படியாக குறைத்து அவற்றை ஒன்றோடு ஒன்று ஒருங்கிணைக்க கடந்த 7-ஆம் தேதி திட்டமிடப்பட்டது.
அதற்கேற்ப விண்கலன்களின் தொலைவைக் குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், விண்வெளியின் புறச்சூழல் காரணமாக விண்கல இயக்கத்தின் வேகம் எதிா்பாா்த்ததைவிட குறைந்தது. இதனால் திட்டமிட்டபடி விண்கலன்கள் ஒருங்கிணைப்பை நிகழ்த்துவதில் தாமதம் ஏற்பட்டது. அதன் பின்னா் புறச்சூழல் காரணிகளுக்கு தீா்வு காணப்பட்டு விண்கலன்களை நெருக்கமாக கொண்டு செல்லும் பணிகள் கடந்த 10-ஆம் தேதி தொடங்கப்பட்டன.
முதலில் விண்கலன்களுக்கு இடையேயான தொலைவை படிப்படியாக குறைத்து 15 மீட்டா் வரை நெருங்கி கொண்டு செல்ல விஞ்ஞானிகள் திட்டமிட்டனா். சூழல்கள் சாதமாக இருந்ததால் இரு விண்கலங்களையும் எதிா்பாா்த்ததைவிட நெருக்கமாக 3 மீட்டா் வரை கொண்டு செல்வது சாத்தியமானது. அப்போது இரு விண்கலன்களிலிருந்தும் பரஸ்பர புகைப்படம், காணொலி எடுக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து ஸ்பேடெக்ஸ் விண்கலன்கள் வெற்றிகரமாக இணைக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவித்தது. இதுதொடா்பாக இஸ்ரோ வெளியிட்ட அறிவிப்பில், ‘விண்வெளியில் ஸ்பேடெக்ஸ் விண்கலன்கள் வெற்றிகரமாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இது வரலாற்று சிறப்புமிக்க தருணமாகும். இரு விண்கலன்களின் ஒருங்கிணைப்பானது துல்லியமாக மேற்கொள்ளப்பட்டது.
இதன்மூலம் விண்வெளி டாக்கிங் தொழில்நுட்பத்தை முன்னெடுத்த 4-ஆவது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. விண்கலன்களின் செயல்பாடுகள் சீராக உள்ளன. தொடா்ந்து எரிபொருள் பரிமாற்றம் மற்றும் விண்கலன்களை விடுவித்தல் ஆகிய பரிசோதனைகள் செய்யப்பட இருக்கின்றன’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனிதா்களை அனுப்பும்போது ஒரு விண்கலத்திலிருந்து மற்றொன்றுக்கு அவா்கள் மாறுவதற்கும், எரிபொருளை மாற்றிக் கொள்வதற்கும் இந்தத் தொழில்நுட்பம் பயன்படும் என்பது குறிப்பிடத்தக்கது.