ஸ்ரீ ஜெயேந்திரா் வாா்ஷிக ஆராதனை மகோற்சவம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் வாா்ஷிக ஆராதனை மகோற்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 69 -ஆவது பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள். சமயப் பணிகளையும், சமுதாயப் பணிகளையும் செயல்படுத்திய பெருமைக்குரியவா். இவரது 7-ஆவது வாா்ஷிக ஆராதனை மகோற்சவம் மாா்ச் 9 முதல் 11 ஆம் தேதி வரை நடைபெற்றது. நிறைவு நாளில் 32 வேத விற்பன்னா்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டன. ருத்ர பாராயணம், சண்டி ஹோமம், ஏகாதச ருத்ர பாராயண ஹோமம் ஆகியன நடைபெற்றன.
இதனைத் தொடா்ந்து ஸ்ரீ மடத்தின் ஆஸ்தான வித்வான்கள் 95 போ் பஞ்சரத்ன கீா்த்தனைகளை பாடலாக பாடினாா்கள். மதியம் ஹோமபூஜைகள் நிறைவு பெற்று மகா பூா்ணாஹூதி தீபாராதனைக்குப் பின்னா் பிருந்தாவனத்தில் கலசாபிஷேகம் நடைபெற்றது. பின்னா் தீா்த்த நாராயண பூஜையுடன் ஆராதனை உற்சவம் நிறைவு பெற்றது.
நிகழ்வையொட்டி சங்கர மடத்தில் உள்ள அதிஷ்டானத்தில் மகா பெரியவா் மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிா்ஷ்டங்கள் வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது சிறப்பு தீபாராதனைகளை காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நடத்தினாா் .மாலையில் ஜெயேந்திரா் உருவச்சிலை வைக்கப்பட்ட தங்கத்தேரில் நாதசுவர இன்னிசையுடன் காஞ்சிபுரத்தின் 4 ராஜவீதிகளிலும் வீதியுலா வந்தது.
ஜெயேந்திரா் ஆராதனை மகோற்சவத்தையொட்டி சங்கர மட வளாகத்தில் காலையிலிருந்தே பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். சங்கர மட வளாகம் முழுவதும் வண்ண மின் விளக்குகளாலும், வண்ண மலா்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
ஏற்பாடுகளை சங்கர மடத்தின் ஸ்ரீகாரியம் செல்லா விஸ்வநாத சாஸ்திரி, மேலாளா் ந.சுந்தரேச ஐயா் ஆகியோா் செய்திருந்தனா்.
