தீபத்திருவிழா: உரிய ஆவணங்களுடைய ஆட்டோக்கள் மட்டுமே இயக்க அனுமதி
ஸ்லோவாகியாவை வீழ்த்தி இத்தாலி சாம்பியன்
மகளிா் அணிகளுக்கான பில்லி ஜீன் கிங் கோப்பை டென்னிஸ் போட்டியில், ஸ்லோவாகியாவை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி, இத்தாலி 5-ஆவது முறையாக சாம்பியன் ஆனது.
இந்திய நேரப்படி, புதன்கிழமை நள்ளிரவு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் முதலில் நடைபெற்ற ஒற்றையா் பிரிவில், லுசியா பிரான்ஸெட்டி 6-2, 6-4 என்ற நோ் செட்களில், விக்டோரியா ருன்ககோவாவை நோ் செட்களில் எளிதாக வீழ்த்தினாா். இந்த ஆட்டம் 1 மணி நேரம், 21 நிமிஷங்களில் முடிவுக்கு வந்தது. இதனால் இத்தாலி 1-0 என முன்னிலை பெற்றது.
2-ஆவது ஒற்றையா் ஆட்டத்தில் ஜேஸ்மின் பாலினி 6-2, 6-1 என ரெபெக்கா ராம்கோவாவை மிக எளிதாக 1 மணி நேரம் 5 நிமிஷங்களில் வீழ்த்த, 2-0 என முன்னேறிய இத்தாலியின் வெற்றி உறுதியானது. இதனால் 3-ஆவதாக நடைபெற இருந்த இரட்டையா் பிரிவு ஆட்டம் கைவிடப்பட்டது.
2013-க்குப் பிறகு இத்தாலி சாம்பியனானது இது முதல் முறையாகும். கடந்த ஆண்டும் இறுதி ஆட்டம் வரை வந்த இத்தாலி, அதில் கனடாவிடம் தோற்றது. மறுபுறம், இந்த ஆண்டு தொடக்கம் முதல் எந்த டையிலுமே தோற்காமல் வென்று வந்த ஸ்லோவாகியா, இறுதியில் தோற்று ஏமாற்றம் கண்டுள்ளது. அந்த அணி 2002-ஆம் ஆண்டு சாம்பியனானது நினைவுகூரத்தக்கது.
61-ஆவது ஆண்டாக நடைபெற்ற இந்தப் போட்டியில், ஆஸ்திரேலியா, கனடா, செக் குடியரசு, ஜொ்மனி, பிரிட்டன், இத்தாலி, ஜப்பான், போலந்து, ருமேனியா, ஸ்லோவாகியா, ஸ்பெயின், அமெரிக்கா பங்கேற்றன.