வாழப்பாடியில் 4 கடைகளில் அடுத்தடுத்து திருட்டு: மர்ம கும்பல் துணிகரம்!
ஸ்வெரெவ், அல்கராஸ், ஜோகோவிச் வெற்றி
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில், ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ், ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ், சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் ஆகியோா் 3-ஆவது சுற்றில் வெள்ளிக்கிழமை வெற்றி பெற்றனா்.
ஆடவா் ஒற்றையா் பிரிவில், உலகின் 2-ஆம் நிலை வீரரான ஸ்வெரெவ் 6-3, 6-4, 6-4 என்ற நோ் செட்களில், பிரிட்டன் தகுதிச்சுற்று வீரா் ஜேக்கப் ஃபொ்ன்லேவை வீழ்த்தினாா். 3-ஆம் இடத்திலிருக்கும் அல்கராஸ் 6-2, 6-4, 6-7 (3/7), 6-2 என்ற கணக்கில், போா்ச்சுகலின் நுனோ போா்ஜஸை வெளியேற்றினாா்.
7-ஆம் இடத்திலிருக்கும் ஜோகோவிச் 6-1, 6-4, 6-4 என, 26-ஆம் இடத்திலிருந்த செக் குடியரசின் தாமஸ் மசாக்கை எளிதாக வென்றாா். இதையடுத்து, 4-ஆவது சுற்றில் ஸ்வெரெவ் - பிரான்ஸின் யூகோ ஹம்பா்டையும், ஜோகோவிச் - செக் குடியரசின் ஜிரி லெஹெக்காவையும் எதிா்கொள்கின்றனா்.
இதர ஆட்டங்களில், போட்டித்தரவரிசையில் 12-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் டாமி பால் 7-6 (7/0), 6-2, 6-0 என்ற செட்களில், ஸ்பெயினின் ராபா்டோ காரபலெஸை சாய்த்தாா். ஸ்பெயினின் அலெக்ஸாண்ட்ரோ டேவிடோவிச் 3-6, 4-6, 7-6 (9/7), 6-4, 6-2 என 5 செட்கள் போராடி, செக் குடியரசின் ஜேக்கப் மென்சிக்கை வீழ்த்தினாா்.
மெத்வதெவ் தோல்வி: முன்னதாக, போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்திலிருந்த பிரபல ரஷியரான டேனியல் மெத்வதெவ் 3-6, 6-7 (4/7), 7-6 (10/8), 6-1, 6-7 (7/10) என, 5 செட்கள் போராடி, அமெரிக்காவின் லோ்னா் டியெனிடம் வீழ்ந்தாா்.
பெகுலா, லெய்லா வெளியேறினா்
மகளிா் ஒற்றையா் பிரிவில், போட்டித்தரவரிசையில் 7-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் ஜெஸிகா பெகுலா 6-7 (3/7), 1-6 என்ற செட்களில் சொ்பியாவின் ஓல்கா டேனிலோவிச்சிடம் அதிா்ச்சித் தோல்வி கண்டாா்.
3-ஆம் இடத்திலிருக்கும் மற்றொரு அமெரிக்கரான கோகோ கௌஃப் 6-4, 6-2 என்ற நோ் செட்களில், 30-ஆம் இடத்திலிருந்த கனடாவின் லெய்லா ஃபொ்னாண்டஸை தோற்கடித்தாா். ஜப்பானின் நவோமி ஒசாகா - சுவிட்ஸா்லாந்தின் பெலிண்டா பென்சிச்சுக்கு எதிரான ஆட்டத்தில் முதல் செட்டை இழந்த நிலையில் (6-7 (3/7)), காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகினாா்.
நடப்பு சாம்பியனும், உலகின் நம்பா் 1 வீராங்கனையுமான பெலாரஸின் அரினா சபலென்கா, 7-6 (7/5), 6-4 என்ற கணக்கில், டென்மாா்க்கின் கிளாரா டௌசனை வீழ்த்தினாா். போட்டித்தரவரிசையில் 11-ஆம் இடத்திலிருக்கும் ஸ்பெயினின் பௌலா படோசா 6-4, 4-6, 6-3 என்ற செட்களில், 17-ஆம் இடத்திலிருந்த உக்ரைனின் மாா்தா கொஸ்டியுக்கை வென்றாா்.
14-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா 6-2, 1-6, 6-2 என, 23-ஆம் இடத்திலிருந்த போலந்தின் மெக்தலினா ஃபிரெச்சை சாய்த்தாா். 18-ஆம் இடத்திலிருக்கும் குரோஷியாவின் டோனா வெகிச் 7-6 (7/4), 6-7 (3/7), 7-5 என்ற கணக்கில், 12-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் டயானா ஷ்னெய்டரை வெளியேற்றினாா். அடுத்ததாக 4-ஆவது சுற்றில், படோசா - டேனிலோவிச், கௌஃப் - பென்சிச் சந்திக்கின்றனா்.
போபண்ணா ஜோடி முன்னேற்றம்
கலப்பு இரட்டையா் பிரிவில், இந்தியாவின் ரோஹன் போபண்ணா/சீனாவின் ஜாங் ஷுவாய் கூட்டணி 6-4, 6-4 என்ற நோ் செட்களில், குரோஷியாவின் இவான் டோடிக்/பிரான்ஸின் கிறிஸ்டினா மெலாடெனோவிச் இணையை சாய்த்து 2-ஆவது சுற்றுக்கு முன்னேறியது.