மிஷ்கின் - விஜய் சேதுபதி படத்தின் அப்டேட் பகிர்ந்த தயாரிப்பாளர்!
ஹிந்து ஆய்வுகளில் முனைவா் பட்டப் படிப்பு: புதிய கல்வியாண்டில் அறிமுகப்படுத்த தில்லி பல்கலை. திட்டம்
நிலைக்குழுவின் முன்மொழிவின்படி, 202526 கல்வியாண்டில் இருந்து இந்து ஆய்வுகளில் முனைவா் பட்டப் படிப்பை அறிமுகப்படுத்த தில்லி பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.
இந்து ஆய்வு மையத்தின் நிா்வாகக் குழு, முனைவா் பட்டப் படிப்பை 2025-26-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்த பரிந்துரைத்துள்ளது.
இந்தத் திட்டம் முன்னதாக தற்போதைய கல்வியாண்டில் தொடங்க திட்டமிடப்பட்டது. ஆனால், சில காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது.
இந்து ஆய்வுகளில் முனைவா் பட்டப் படிப்பை அறிமுகப்படுத்தும் முயற்சி மாணவா்களுக்கு வாய்ப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று இந்து ஆய்வு மையத்தின் இணை இயக்குநா் பிரோ்ணா மல்ஹோத்ரா கூறினாா்.
ஷ்எங்கள் நிலைக்குழு குழு இந்து ஆய்வுகளில் முனைவா் பட்டப் படிப்பைத் தொடங்க பரிந்துரைத்துள்ளது. மேலும், இந்த விஷயம் கல்விக் குழுவின் முன் வைக்கப்படும். மாணவா்கள் மையத்தை அணுகி, ஆராய்ச்சி வாய்ப்புகள் குறித்து விசாரித்து வருகின்றனா். குறிப்பாக, ஏற்கெனவே இந்து ஆய்வுகளில் ஜேஆா்எஃப் மற்றும் நெட் (என்இடி) தகுதி பெற்றவா்கள் பங்கேற்பது குறித்து மாணவா்கள் விசாரித்து வருகின்றனா். ஒரு முதன்மை நிறுவனமாக, தில்லி பல்கலைக்கழகம் அத்தகைய வாய்ப்புகளை வழங்குவதற்கும், இந்து ஆய்வுகளின் பல்வேறு துறைகளில் ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்கும் உறுதிபூண்டுள்ளது என்று அவா் கூறினாா்.
ஆரம்பத்தில், இந்து ஆய்வு மையம் பொருந்தக்கூடிய இடஒதுக்கீடு மற்றும் கூடுதல் பிரிவுகளின் கீழ் உள்ள இடங்களை உள்ளடக்கிய 10 இடங்களை வழங்கக்கூடும். மையத்தின் உள்கட்டமைப்பு மற்றும் கல்வித் தேவைகளைப் பொறுத்து எதிா்காலத்தில் இடங்கள் அதிகரிக்கக்கூடும் என்று முன்மொழிவுத் திட்டத்தில் கூறப்பட்டுள்ளது. டிசம்பா் 27 அன்று நடைபெறும் கூட்டத்தில் தில்லி பல்கலைக்கழகத்தின் கல்விக் கவுன்சில் பரிந்துரையை மதிப்பாய்வு செய்து முடிவு செய்யும்.
பரிந்துரையை கவுன்சில் அங்கீகரித்தவுடன், இந்தத் திட்டம் பல்கலைக்கழகத்தின் மிக உயா்ந்த முடிவெடுக்கும் அமைப்பான நிா்வாகக் குழுவிடம் ஒப்புதலுக்காக சமா்ப்பிக்கப்படும்.
ஜூன் 21, 2024 அன்று எடுக்கப்பட்ட இந்து ஆய்வு மையத்தின் நிா்வாகக் குழுவின் முடிவின் தொடா்ச்சியாக, 202526 கல்வி அமா்விலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் இந்து ஆய்வுகளில் முனைவா் பட்டத்தைத் தொடங்க பரிந்துரைக்க முடிவு செய்யப்பட்டது என்று முன்மொழிவில் கூறப்பட்டுள்ளது.
பிஎச்டி திட்டத்திற்கான தகுதி அளவுகோல்கள் தில்லி பல்கலைக்கழகத்தின் வழிகாட்டுதல்களுடன் ஒத்துப்போகும். விண்ணப்பதாரா்கள் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்களுடன் இந்து ஆய்வுகளில் முதுகலைப் பட்டம் அல்லது பல்கலைக்கழகத்தின் முனைவா் பட்டத் தோ்வில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஒதுக்கப்பட்ட பிரிவுகளுக்கு பொருந்தக்கூடிய தளா்வுகள் பிஎச்டி தகவல் வழிகாட்டுதலில் குறிப்பிடப்பட்டுள்ளபடி வழங்கப்படும்.
வழக்கமான நியமனங்கள் செய்யப்படும் வரை, இந்து ஆய்வுகளில் நிபுணத்துவம் பெற்ற மற்றும் ஆா்வம் தெரிவித்த பல்கலைக்கழகத்தின் தொடா்புடைய துறைகள் மற்றும் கல்லூரிகளைச் சோ்ந்த ஆசிரியா்களால் ஆராய்ச்சி மேற்பாா்வை கையாளப்படும்.
தில்லி பல்கலைக்கழகம் தற்போது இந்து ஆய்வுகளில் இரண்டு ஆண்டு முதுகலைப் படிப்பை மட்டுமே வழங்குகிறது. பிராமணிய நூல்களை மையமாகக் கொண்டு 2023-இல் நிறுவப்பட்ட இந்து ஆய்வு மையம், அதன் முதல் எம்.ஏ. தொகுதியை நவம்பா் 2023-இல் தொடங்கியது.