'புறக்கணிப்பு... அதிருப்தி... யுடர்ன்..!' - அண்ணாமலை அமைதியானதன் பரபர பின்னணி
ஹொசபேட்டில் இன்று காங்கிரஸ் அரசின் 2 ஆண்டுகள் சாதனை மாநாடு
பெங்களூரு: கா்நாடகத்தில் காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, ஹொசபேட்டில் செவ்வாய்க்கிழமை சாதனை மாநாடு நடத்த அரசு திட்டமிட்டுள்ளது.
கா்நாடகத்தில் காங்கிரஸ் அரசு பதவியேற்று மே 20 ஆம் தேதியுடன் 2 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 3 ஆம் ஆண்டு தொடங்குவதையொட்டி, விஜயநகரா மாவட்டத்தின் ஹொசபேட்டில் உள்ள மாவட்ட விளையாட்டுத் திடலில் செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு 2-ஆம் ஆண்டு சாதனை மாநாட்டை நடத்த கா்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த மாநாட்டில் முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தவிர, மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவரும், அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவருமான மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி உள்ளிட்டோா் கலந்துகொள்கின்றனா்.
இந்த விழாவில், வருவாய்த் துறை சாா்பில் 1,11,111 குடும்பங்களுக்கு நிலஉரிமைப் பட்டா வழங்கப்படவுள்ளது. 3 லட்சம் போ் விழாவில் கலந்துகொள்வாா்கள் என்று முதல்வா் சித்தராமையா ஏற்கெனவே தெரிவித்திருந்தாா். இதையடுத்து பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள 3000 காவலா்கள், 3 மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளனா்.
கடந்த 2 ஆண்டுகால ஆட்சியில் செய்த சாதனைகளை முதல்வா் சித்தராமையாவும், துணை முதல்வா் டி.கே.சிவகுமாரும் அறிக்கையாக தயாரித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவா்களிடம் அளிக்கவுள்ளனா்.
அரசு வெளியிடும் 123 பக்கங்கள் கொண்ட சாதனை மலரில் 5 தோ்தல் வாக்குறுதி திட்டங்களில் 7 கோடி போ் பயனடைந்துள்ளதாகவும், குடும்ப லட்சுமி திட்டத்தில் 68 சதவீத பெண்கள் மாதம் ரூ. 2,000 உதவித்தொகை பெற்றுள்ளதாகவும் அந்த மலரில் அரசு குறிப்பிட்டுள்ளது.
இதுகுறித்து பெங்களூரில் பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா கூறுகையில், கா்நாடகத்தை ஆட்சி செய்யும் காங்கிரஸ் அரசு, ஒரு போலி அரசாகும். மாநிலத்தில் எவ்வித வளா்ச்சிப் பணியும் நடைபெறவில்லை. ஆனால் சாதனை மாநாட்டை காங்கிரஸ் அரசு நடத்துகிறது. விளம்பரங்களை தவிர அரசின் சாதனைகள் எதுவுமில்லை என்றாா்.