Dhoni : 'I Don't Know' - தோனியின் எதிர்காலம் குறித்து ப்ளெம்மிங்கின் 'நறுக்' பதில்
'ப்ளெம்மிங் பத்திரிகையாளர் சந்திப்பு!'
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி இன்று நடக்கவிருக்கிறது. இந்தப் போட்டிக்கு முன்பாக சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ப்ளெம்மிங் பத்திரிகையாளர்களைச் சந்தித்திருந்தார். அப்போது தோனியின் எதிர்காலம் குறித்த ஒரு கேள்விக்கு ஒரே வரியில் நறுக்கென பதில் சொல்லியிருக்கிறார்.

'அனுபவமும் இளமையும்...'
ஸ்டீபன் ப்ளெம்மிங் பேசியதாவது, 'இந்த சீசன் எங்களுக்கு அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. வருங்காலத்தை மனதில் வைத்துதான் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்தோம். தனிப்பட்ட முறையில் எனக்கு அனுபவ வீரர்களின் மீதே ஈர்ப்பு அதிகம். ஆனால், இந்த அணி அனுபவமும் இளமையும் கலந்த அணியாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.
ஏனெனில், இந்த நாட்டில் அதிகமான இளம் திறமையாளர்கள் இருக்கிறார்கள். இந்த சீசனிலேயே நிறைய இளம் வீரர்கள் சாதித்ததைப் பார்த்தோம். ருத்துராஜின் காயத்தைப் பற்றிக் கேட்கிறீர்கள். ருத்துராஜ் எப்போதோ தொடரிலிருந்து வெளியேறிவிட்டார். 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை என்கிற சுழற்சியில் நம்முடைய அணியை மறு உருவாக்கம் செய்யும் முறை இங்கே இருக்கிறது.

ஐ.பி.எல் இன் மிக அழகான விஷயமும் அதுதான். கொடுமையான விஷயமும் அதுதான் என நினைக்கிறேன். நாங்கள் கடந்த போட்டியில் நன்றாக ஆடி வென்றிருக்கிறோம். கடைசி இரண்டு போட்டிகளையும் வென்று இந்த சீசனை பாசிட்டிவ்வாக முடிக்க வேண்டும் என நினைக்கிறோம்.' என்றார்.
'தோனி குறித்து...'
'தோனி கேப்டனாகவே தொடருவாரா, அடுத்த சீசனில் ஆடுவாரா..' என தோனியின் எதிர்காலம் குறித்து ஒரு பத்திரிகையாளர் கேட்க, அதற்கு ப்ளெம்மிங், 'I Don't Know' என தீர்க்கமாக ஒரே வரியில் பதில் சொல்லியிருந்தார்.

தோனி தொடர்ந்து ஆடுவாரா? உங்களின் கருத்து என்ன என்பதை கமெண்ட்டில் தெரியப்படுத்துங்கள்.