நிதி ஆயோக்: "வீராவேசமாக பேசியவர் டெல்லிக்கு பறக்கிறாராம்..."- ஸ்டாலினைச் சாடும் ...
'புறக்கணிப்பு... அதிருப்தி... யுடர்ன்..!' - அண்ணாமலை அமைதியானதன் பரபர பின்னணி
கடந்த சில வாரங்களாக "அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணியை தி.மு.க-வை வீழ்த்துவதற்கான வலிமையான கூட்டணியாக நான் நினைக்கவில்லை" என விமர்சனம் செய்து வந்தார், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை. இந்தச்சூழலில்தான் தற்போது, 'அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி வலுவாக இருக்கிறது. கூட்டணி குறித்தெல்லாம் கட்சித் தலைவர்கள்தான் பதில் சொல்வார்கள்' என அப்படியே அந்தர்பல்டி அடித்திருக்கிறார். இதன் பின்னணி என்ன?

கடந்த ஏப்ரல் 12-ம் தேதி தமிழ்நாடு பா.ஜ.க தலைவராக இருந்த அண்ணாமலை மாற்றப்பட்டு புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டார். பிறகு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அண்ணாமலை, 'இவ்வளவு நாள் எனக்குப் பொறுப்பு இருந்தது. இனி நான் சுதந்திரமாகப் பேசலாம்; செயல்படலாம். இனி அரசியலில் சிக்ஸ் அடிப்பதுதான் என் வேலை. டிஃபென்ஸ் ஆட்டத்தை நயினார் பார்த்துக்கொள்வார்” எனப் பேசினார். அப்போது அதைக் கட்சியினர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. பிறகு வெளிநாடு சென்று திரும்பிய அண்ணாமலை தான் சொன்னதுபோலவே தனி ரூட்டில் பயணிக்கத் தொடங்கினார்.
புறக்கணிப்பு..!
அதாவது கடந்த மாதம் 19-ம் தேதி கோவை காளப்பட்டியில் நயினார் நாகேந்திரனுக்கு வரவேற்பு தெரிவித்து கூட்டம் ஒன்று நடந்தது. அதில் எல்.முருகன், வானதி சீனிவாசன் உள்பட பலரும் பங்கேற்றனர். ஆனால் அண்ணாமலை பங்கேற்கவில்லை. இத்தனைக்கும் சம்மந்தப்பட்ட நிகழ்ச்சி அண்ணாமலையின் வீட்டுக்கு அருகில்தான் நடந்தது. பிறகு பஹல்காமில் அப்பாவி மக்கள் 26 பேரைத் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்ததற்கு கண்டனம் தெரிவித்தும், 'தமிழகத்தில் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் பாகிஸ்தான், பங்களாதேஷியர்களை மாநில அரசு உடனடியாக வெளியேற்ற வேண்டும்' என வலியுறுத்திக் கடந்த 5-ம் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க-வினர் ஈடுபட்டனர்.
முன்னதாக 'இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் பங்கேற்ற வேண்டும்' என, தேசிய, மாநிலத் தலைமை உத்தரவிட்டிருந்தது. அதன்படி தமிழிசை, வானதி, ஹெச்.ராஜா போன்ற மூத்த தலைவர்கள் கலந்துகொண்டனர்.

ஆனால் இதில் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்கவில்லை. மாறாக அன்றைய தினம் கொங்கு மண்டலத்தில் நடக்கும் தொடர் கொலைகளைக் கண்டித்து ஈரோட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அவர் கலந்து கொண்டார்.
அப்போது பேசியவர், "சிவகிரி இரட்டை கொலை சம்பவத்தில் குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்க வேண்டும். இல்லையென்றால் வரும் 20-ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவேன்." என்றார். இவ்வாறு தேசிய, மாநிலத் தலைமையின் அறிவுறுத்தியும் பஹல்காம் தாக்குதலுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் அண்ணாமலை பங்கேற்காதது கட்சிக்குள் சர்ச்சையையும், விவாதத்தையும் ஒருசேரக் கிளப்பியது.
கூடவே செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, 'தி.மு.க-வை வீழ்த்துவதற்கு வலிமையான கூட்டணியாக அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணியைப் பார்க்கவில்லை. ஏனெனில் எண்ணிக்கை மட்டும் போதாது' என கருத்து தெரிவித்திருந்தார். இது ஒட்டுமொத்த பா.ஜ.க சீனியர்களையும் கொதிப்படைய செய்தது. இதற்கு அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணியை இறுதி செய்தது அமித் ஷாதான். ஆனால் இதற்கு நேர் எதிராக அண்ணாமலை பேசியது கட்சியினரை கடுப்பாக்கியது.
இப்படி தனி ரூட்டில் பயணித்து வந்த அண்ணாமலை சமீபத்தில் அளித்த பேட்டியில், "கூட்டணி குறித்தெல்லாம் கட்சி தலைவர்கள்தான் பதில் சொல்வார்கள். பா.ஜ.க கூட்டணி வலுவாகத்தான் உள்ளது. தி.மு.க-வினர்தான் தேவையில்லாத குழப்பங்களை உருவாக்குகிறார்கள்.

நான் ஆடு, மாடோடு இருக்கிறேன். விவசாயம் பார்கிறேன். புத்தகங்கள் படிப்பதற்கும் குழந்தைகளோடு அதிக நேரம் செலவிடுவதற்கும் நேரம் கிடைத்துள்ளது. தற்போது வாழ்க்கையில் நிம்மதியாக இருக்கிறேன். மத்திய அமைச்சரவையில் வாய்ப்பு கிடைக்குமா என்று கேட்கிறீர்கள். என்னை ஏன் கூண்டுக்குள் அடைக்க நினைக்கிறீர்கள்?. நான் சாமானிய மனிதராக இருப்பதையே ஒரு பவராக பார்க்கிறேன். எனக்கு பவரெல்லாம் தேவையில்லை. நான் சுதந்திரமாக இருக்கிறேன்.
மேலும் எனது கூண்டுக்கிளி கருத்தை விவாதமாக்க வேண்டாம். நான் எனக்காகப் பேசுகிறேன். நீங்கள் உங்களுக்காகக் கேட்கிறீர்கள். நான் கூண்டுக்கிளி என்று சொன்னதை மற்ற அமைச்சர்களுடன் ஏன் ஒப்பிடுகிறீர்கள்?. நான் தற்போது தந்தையாகவும் மகனாகவும் இருக்க விரும்புகிறேன். என்னை ஏன் அடைத்து வைக்கப் பார்க்கிறீர்கள் என்றுதான் தெரிவித்தேன்" என்றார்.
கடந்த சில வாரங்களாக "அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணியை தி.மு.க-வை வீழ்த்துவதற்கான வலிமையான கூட்டணியாக நான் நினைக்கவில்லை" என விமர்சனம் செய்து வந்த அண்ணாமலை திடீரென "அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி வலுவாக இருக்கிறது. கூட்டணி குறித்தெல்லாம் கட்சி தலைவர்கள்தான் பதில் சொல்வார்கள்' என அப்படியே அந்தர்பல்டி அடித்திருக்கிறார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய கமலாலய சீனியர்கள், "மாநில தலைவர் பதவியைத் தக்கவைத்துக்கொள்ள அண்ணாமலை பலகட்ட முயற்சிகளை மேற்கொண்டார். அதில் ஒன்றுகூடக் கைகூடவில்லை. இதையடுத்து தனக்கு மத்திய இணை அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்தார். இதற்காக ஆந்திராவில் காலியாக இருக்கும் மாநிலங்களவை எம்.பி சீட்டை பயன்படுத்தத் திட்டமிட்டிருந்தார். அதாவது கடந்த ஜனவரியில் ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் தீவிர ஆதரவாளராக இருந்த விஜய் சாய் ரெட்டி தனிப்பட்ட காரணங்களுக்காக அரசியலிலிருந்து விலகப்போவதாக அறிவித்துவிட்டு, தனது ராஜ்ய சபா எம்.பி பதவியை ராஜினாமா செய்திருந்தார். அந்த சீட்டுக்குத்தான் அண்ணாமலை குறி வைத்திருந்தார்.
இதற்காக சந்திரபாபு நாயுடுவின் மகனும் அமைச்சருமான நாரா லோகேஷ் மூலமாகக் காய் நகர்த்தி வந்தார். கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது கோவை தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலைக்கு ஆதரவாக நாரா லோகேஷ் பிரசாரம் செய்தது குறிப்பிடத்தக்கது. இதனால் இருவருக்கும் இடையில் நல்ல நட்பு இருக்கிறது. அண்ணாமலையின் கோரிக்கைக்கு நாரா லோகேஷ் ஓகே சொல்லிவிட்டார்.
ஆனால் அந்த இடத்தை பவன் கல்யாணில் அண்ணனும் பிரபல நடிகருமான சிரஞ்சீவி அல்லது முன்னாள் முதல்வர் நல்லாரி கிரண் குமார் ரெட்டி ஆகியோரில் ஒருவருக்குக் கொடுக்க ஆலோசித்து வருகிறது.
இதனால் அண்ணாமலை அப்செட்டில் உச்சத்துக்கே சென்றுவிட்டார். இதனால்தான் கடந்த 3.5.2025 அன்று காட்டாங்குளத்தூரில் இருக்கும் தனியார் ஹோட்டலில் தேசிய தலைவர் நட்டா நடத்திய மையக்குழு கூட்டத்திலும் அண்ணாமலை பங்கேறவில்லை. இதன் தொடர்ச்சியாகவே பஹல்காம் தாக்குதலுக்கு எதிரான போராட்டத்திலும் அவர் பங்கேற்கவில்லை.
எடப்பாடி பிறந்தநாளுக்கு பா.ஜ.க தலைவர்கள் பலரும் வாழ்த்து சொல்ல சென்றனர். ஆனால் அண்ணாமலையை அவர்கள் பலமுறை அழைத்தும் அவர் செல்லவில்லை. இதெல்லாம் அகில இந்திய தலைமைக்கு புகாராக சென்றது. இதையடுத்துதான் தற்போது அடக்கி வாசித்து வருகிறார்" என்றனர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன், "அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி, தலைவர் பதவி பறிப்பையெல்லாம் அண்ணாமலை துளியும் விரும்பவில்லை. ஆந்திராவிலிருந்து தன்னை எம்.பி-யாக்ககுவார்கள் என்ற அவரது எதிர்பார்ப்பும் கானல் நீராகப் போய்விட்டது. இதனால் கடும் மன உளைச்சலில் இருக்கிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், 'தி.மு.க-வை வீழ்த்துவதற்கு வலிமையான கூட்டணியாக அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணியைப் பார்க்கவில்லை. ஏனெனில் எண்ணிக்கை மட்டும் போதாது. தி.மு.க-வை வீழ்த்திவிட்டு என்ன செய்யப்போகிறீர்கள் என மக்கள் கேட்கிறார்கள்' என்கிறார். இதன் மூலம் அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணியை உடைப்பதற்கான வேலையைத் தொடங்கினார்.

'தி.மு.க-வை வீழ்த்த வேண்டும்' என்பதற்குத்தான் இக்கூட்டணியை அமைத்ததாக அமித்ஷாவே சொல்லியிருக்கிறார். அதேநேரத்தில், 'எடப்பாடி தலைமையில்தான் ஆட்சி' எனவும் அமித் ஷா தெரிவித்தார். மேலும் 'கூட்டணி குறித்து யாரும் பேசக்கூடாது' என நயினார் நாகேந்திரன், சுதாகர் ரெட்டி கூறியுள்ளனர். ஆனால், 'அமித் ஷா கூறியதைத் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுவிட்டது. பா.ஜ.க தலைமையில்தான் ஆட்சி என அவர் தெரிவித்தார்' என அண்ணாமலை பேட்டி கொடுக்கிறார்.
இதன் மூலமாகக் கூட்டணி இருக்கக்கூடாது என்பதில் அவர் தெளிவாக இருக்கிறார். நட்டா சென்னைக்கு வந்தநாளில் அதிகாலையில் பெங்களூருவுக்கு அண்ணாமலை வந்துவிட்டார். அவர் நினைத்திருந்தால் விமானத்தில் சென்னைக்கு உடனடியாக வந்து மையக்குழு கூட்டத்தில் பங்கேற்றிருக்கலாம். ஆனால் அண்ணாமலை தவிர்த்துவிட்டார். பஹல்காம் தாக்குதலுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்திலும் அவர் பங்கேற்கவில்லை. ஆனால், 'சிவகிரி இரட்டை கொலைக்குத் தீர்வு கிடைக்கும்வரை உண்ணாவிரதம் இருப்பேன்' எனப் பேட்டி கொடுக்கிறார். போராட்டத்தை அறிவிக்க வேண்டியது மாநில தலைவர் நயினார்தான்.
ஆனால் மாநிலத் தலைமையை மீறி அண்ணாமலை செயல்படுகிறார். இவர் மாநில தலைவராக இருக்கும்போது இப்படி பேட்டி கொடுத்த தமிழிசைக்குப் பல நெருக்கடிகளைக் கொடுத்தவர். தற்போது அண்ணாமலை மட்டும் எப்படி பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்தலாம்?. இதன் மூலம் முழுக்க முழுக்க ஒட்டுமொத்த பா.ஜ.க-வும் தன் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என நினைக்கிறார். மேலும் அமித்ஷாவைத் துளியும் மதிக்கவில்லை. அப்படி மதித்திருந்தால், 'தி.மு.க-வை வீழ்த்துவதற்கு வலிமையான கூட்டணி அமைக்கப்பட்டதாக இதை நான் நினைக்கவில்லை' எனப் பேட்டி கொடுத்திருக்க மாட்டார். இது சர்ச்சையானதால் தற்போது கூட்டணி குறித்து தலைவர்கள் பேசுவார்கள் என பேட்டி கொடுக்கிறார்.
அதாவது அந்தர்பல்டி அடிப்பதில் உலக அளவில் அண்ணாமலைதான் முதலிடத்தில் இருக்கிறார். அறிவாலய செங்கல் ஒவ்வொன்றாக பிடுங்குவேன், தி.மு.க-வை அகற்றும் வரை காலில் செருப்பு அணிய மாட்டேன் என அவர் சொன்ன எதையும் பின்பற்றவில்லை. தொண்டனாக இருக்க விரும்புகிறேன் என்கிறார். தொண்டனாக இருப்பவர்கள் கட்சியை வளர்க்கத்தான் விரும்புவார்கள். தன்னிச்சையாக இப்படி பேட்டி கொடுக்கமாட்டார்கள். ஆடுமாடு, குடும்பம் என இருப்பதாக சொல்கிறார். இதுதான் கட்சிப் பணியா?. தற்போதுதான் அமெரிக்கா சென்றுவிட்டு வந்தார். மீண்டும் சிங்கப்பூர் செல்ல தயாராகி வருகிறார். இதுதான் கட்சிப் பணியா?. எப்போதும் தன்னை மையப்படுத்திய அரசியலை முன்னெடுப்பதற்குத்தான் அண்ணாமலை தயாராக இருப்பார். இதன் மூலமாக நயினார் நாகேந்திரனை டார்கெட் செய்ய ஆரம்பித்துவிட்டார். ஆனால் நயினார் அரசியல்வாதி. அவர் அண்ணாமலைக்கு எதிராக செயல்பட ஆரம்பித்தால் அவர் தாக்குபிடிக்கமாட்டார்" என்றார்.