நீதிபதி கவாயை வரவேற்க வராத உயர் அதிகாரிகள்... மகா., - கோவா வழக்குரைஞர்கள் சங்கம்...
ராஜஸ்தானின் 4 மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்! மக்கள் வெளியேற்றம்!
ராஜஸ்தான் மாநிலத்தில் 4 மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராஜஸ்தானின் சிகார், பாலி, பில்வாரா மற்றும் தௌஸா ஆகிய மாவட்டங்களின் ஆட்சியர் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதினால், அங்கு பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன.
சிகாரின் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மே 20) தலைமைச் செயலாளருடன், அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், அங்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக வந்தத் தகவலை அடுத்து அங்கிருந்தவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு, அந்தக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர், அங்கு காவல் துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் ஆட்சியர் அலுவலக வளாகம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அம்மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், பாலி மாவட்டத்தின் ஆட்சியருக்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும், அதில், அந்த அலுவலகத்தின் வளாகம் முழுவதும் வெடித்துச் சிதறும் எனக் கூறப்பட்டிருந்ததாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
அங்கும், மக்களை வெளியேற்றி, மோப்ப நாய்களின் உதவியுடன் பாதுகாப்புப் படையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
பில்வாரா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கும் இதேபோன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதினால், அங்கு மக்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டு, அஜ்மீரிலிருந்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அம்மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தீவிர கண்காணிப்பில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
தௌஸா மாவட்ட ஆட்சியருக்கும் மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இத்துடன், நான்கு மாவட்டங்களின் சைபர் க்ரைம் காவல் துறையினர், அந்த மின்னஞ்சல்களை அனுப்பிய அடையாளம் தெரியாத மர்ம நபர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கு முன்னர் ராஜஸ்தானின் அரசு அலுவலகங்களுக்கு இதேபோன்று விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல்கள் அனைத்தும் போலியானவை என உறுதி செய்யப்பட்ட போதிலும் இந்த மிரட்டல்களை தட்டிக்கழிக்காமல் காவல் துறையினர் தீவிர சோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், பாதிக்கப்பட்ட அலுவலகங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் முடியும் வரை மக்கள் அங்குச் செல்ல வேண்டாம் என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
முன்னதாக, ஜெய்ப்பூரிலுள்ள சவாய் மன்சிங் விளையாட்டு அரங்கத்துக்கு கடந்த மே 14 ஆம் தேதியன்று மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
அந்த மின்னஞ்சலில், பாகிஸ்தானுடன் மோதினால் இதுதான் நிலைமை என்றும் ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடியாக, அந்த விளையாட்டு அரங்கத்துடன் உங்கள் மருத்துவமனைகளும் வெடித்துச் சிதறும் எனவும் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.