உலகின் மிகப்பெரிய சுகாதாரக் காப்பீடு திட்டம் ஆயுஷ்மான் பாரத்: பிரதமர் மோடி
உலகின் மிகப்பெரிய சுகாதாரக் காப்பீடு திட்டம், இந்தியாவின் ஆயுஷ்மான் பாரத் என்றும் இதில் 58 கோடி மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை வழங்குவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
ஜெனீவாவில் நடைபெற்ற உலக சுகாதார சபையின் 76வது அமர்வில் பிரதமர் நரேந்திர மோடி தில்லியில் இருந்தவாறு காணொலி வாயிலாக இன்று (மே 20) உரையாற்றினார்.
இதில், உலக சுகாதாரத்தில் இந்தியாவின் பங்கு என்ன என்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசினார். இதில் சுகாதாரத்தில் அரசின் முன்னெடுப்புகள் குறித்து மோடி பேசியதாவது,
''உலக சுகாதார மையத்தின் கருப்பொருள், ஆரோக்கியத்துக்கான ஒரு உலகம் என்பதாகும். ஆரோக்கியமான உலகின் எதிர்காலமானது உலக நாடுகள் ஒன்று சேர்தல், ஒருங்கிணைந்த பார்வை, ஒத்துழைப்பு ஆகியவற்றை மட்டுமே சார்ந்துள்ளது. இவை இந்திய மருத்துவ சீர்திருத்தத்திலும் முக்கியப் பங்காற்றுபவை.
நாங்கள் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை மக்களுக்காக கொண்டுவந்துள்ளோம். இது உலகின் மிகப்பெரிய சுகாதாரக் காப்பீடு திட்டமாகும். இதில் 58 கோடி மக்களுக்கு இலவசமாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. 70 வயதுடையோருக்கும் இந்தத் திட்டம் பொருந்தும் வகையில் சமீபத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஆயிரக்கணக்கான சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்கள் ஒன்றோடொன்று வலையமைப்பில் செயல்படுகின்றன. கர்ப்பிணிகள், குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடுவதை கண்காணிக்க இந்தியாவிடம் டிஜிட்டல் தளம் உள்ளது. மருத்துவத் துறையில் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியை இந்தியா திறம்பட பயன்படுத்துகிறது.
ஆயிரக்கணக்கான மருந்தாளுநர்கள் விலை உயர்ந்த மருந்துகளை சந்தை மதிப்புகளை விட குறைவான விலையில் வழங்குகின்றனர்.
ஜூன் 11ஆம் தேதி சர்வதேச யோகா நாள் வருகிறது. ’ஒரே உலகம்; ஒரே ஆரோக்கியத்துக்கான யோகா’ என்பதை இந்த ஆண்டு யோகாவின் கருப்பொருளாக எடுத்துள்ளோம். இதில் அனைத்து நாடுகளும் பங்கேற்க அழைப்பு விடுக்கவுள்ளோம்.
உலக சுகாதார அமைப்பின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது பாராட்டுகள். ஆரோக்கியமான உலகை உருவாக்குவதற்காக, எதிர்காலத்தில் வரும் பெருந்தொற்றுகளை சிறந்த கூட்டுழைப்புடன் எதிர்கொள்வதற்கான அர்ப்பணிப்பை இவர்கள் பகிர்கின்றனர்'' எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | மும்பையில் தலைமை நீதிபதி கவாயை வரவேற்க வராத உயர் அதிகாரிகள்! காரணம் என்ன?