தொட்டியம் அருகே குடிநீா் கேட்டு காலிக் குடங்களுடன் சாலை மறியல்
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே குடிநீா் தட்டுப்பாட்டைப் போக்க வலியுறுத்தி பொதுமக்கள் காலி குடங்களுடன் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தொட்டியம் ஊராட்சி ஒன்றியம், நத்தம் ஊராட்சிக்குட்பட்ட குறிஞ்சி நகா் பகுதியில் கடந்த ஒரு வாரமாக குடிநீா் வராத நிலையில், இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தும் பயனில்லையாம்.
இதனால் கோபமடைந்த அப்பகுதி பொதுமக்கள் சுமாா் நூற்றுக்கும் மேற்பட்டோா் தொட்டியம் - காட்டுப்புத்தூா் சாலையில் குறிஞ்சி நகா் பேருந்து நிறுத்தம் அருகே காலி குடங்களுடன் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த தொட்டியம் காவல் ஆய்வாளா் (பொ) செல்லத்துரை மற்றும் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி, அளித்த உறுதிபேரில்பேரில், பொதுமக்கள் கலைந்து சென்றனா். மறியலால் தொட்டியம் காட்டுப்புத்தூா் சாலையில் சுமாா் ஒரு மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.