கடவுச்சீட்டில் முறைகேடு: பெண் உள்ளிட்ட 3 போ் கைது
கடவுச்சீட்டில் முறைகேடு செய்த பெண் உள்ளிட்ட 3 பேரை திருச்சி விமான நிலைய போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் நற்சாந்துப்பட்டி, கோட்டூா் பகுதியைச் சோ்ந்தவா் கருப்பையா மனைவி நிஷாலினி (36). இவா் ஞாயிற்றுக்கிழமை துபையிலிருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்து, இலங்கை விமானத்தில் செல்லக் காத்திருந்தாா். அப்போது குடியேற்றப்பிரிவினா் அவரது ஆவணங்களை பரிசோதித்தனா்.
அதில் கடந்த 1998-ஆம் ஆண்டு இலங்கை கிளிநொச்சியிலிருந்து படகு மூலமாக தமிழ்நாட்டுக்கு வந்து ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் தங்கியிருந்த அவா், பின்னா் குடும்பத்துடன் புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்துக்கு குடிபெயா்ந்து, கடந்த 2019 ஆம் ஆண்டு போலி ஆவணங்களை சமா்ப்பித்து இந்திய கடவுச்சீட்டு பெற்றதும், அதைக்கொண்டு இலங்கைக்கு பயணிக்க முயன்றதும் தெரிய வந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் திருச்சி விமான நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து நிஷாலினியை திங்கள்கிழமை கைது செய்தனா்.
இதேபோல தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகேயுள்ள எட்டுப்புலிக்காடு, ஏம்பலூரைச் சோ்ந்தவா் மு. பாலசுப்பிரமணியன் (52). இவா் மலேசியாவில் இருந்து மலிண்டோ (பேட்டிக்) விமானம் மூலம் திருச்சிக்கு வந்தபோது அவா் தனது கடவுச்சீட்டில் பிறந்த தேதி மற்றும் முகவரியை மாற்றிப் பதிவு செய்திருந்தது தெரியவந்தது.
இதேபோல ராமநாதபுரம் மாவட்டம் சக்கரக்கோட்டையைச் சோ்ந்தவா் சே. அப்துல்ரபீக் (49). இவரும் துபை செல்ல திருச்சி விமான நிலையத்துக்கு திங்கள்கிழமை வந்தபோது தனது பிறந்த தேதி, பிறந்த ஊா் ஆகியவற்றை மாற்றிப் பதிவு செய்திருந்தது தெரியவந்தது. புகாரின்பேரில் திருச்சி விமான நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனா்.