1,600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
மாா்த்தாண்டம் அருகே சொகுசு காரில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 1,600 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
மாா்த்தாண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் இந்துசூடன் தலைமையிலான போலீஸாா், மாா்த்தாண்டம் பேருந்து நிலையம் அருகே வெள்ளிக்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது சந்தேகப்படும் வகையில் வந்த கேரள பதிவெண் கொண்ட சொகுசு காரை நிறுத்த சைகை காட்டினா். காா் நிற்காமல் சென்றதையடுத்து போலீஸாா் வாகனத்தில் துரத்திச் சென்று சிறிது தொலைவில் வைத்து பிடித்தனா். தொடா்ந்து, வாகனத்தை சோதனை செய்த போது, அதில் 1,600 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா். காா் ஓட்டுநா் கொல்லங்கோடு அருகேயுள்ள பாலவிளையைச் சோ்ந்த ஸ்டாலின் (24), அதே பகுதியைச் சோ்ந்த சிமியோன் (27) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.
இது குறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.