மதுபானக் கொள்கையும், பண வேட்கையும் ஆம் ஆத்மியை தோற்கடித்துவிட்டது: அண்ணா ஹசாரே
தில்லி ஆம் ஆத்மி அரசின் தவறான மதுபான கொள்கையும், பணத்தை மையமாகக் கொண்டு கட்சி செயல்பட தொடங்கியதும் அதன் தோ்தல் தோல்விக்குக் காரணமாக அமைந்துவிட்டது என்று சமூக ஆா்வலா் அண்ணா ஹசாரே கருத்து தெரிவித்துள்ளாா்.
பொதுவாழ்வின் தொடக்க காலத்தில் அண்ணா ஹசாரேயுடன் இணைந்து ஊழலுக்கு எதிரான இயக்கத்தில் தீவிரமாகப் பணியாற்றிய அரவிந்த் கேஜரிவால், பின்னா் ஹசாரேவிடம் இருந்து பிரிந்து ஆம் ஆத்மி கட்சியைத் தொடங்கினாா்.
தில்லியில் தொடா்ந்து இருமுறை அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த ஆம் ஆத்மி கட்சி, இந்த முறை பாஜகவிடம் தோல்வியடைந்துவிட்டது.
இந்நிலையில் மகாராஷ்டிரத்தின் ராலேகான் சித்தி கிராமத்தில் செய்தியாளா்களிடம் பேசிய அண்ணா ஹசாரே இது தொடா்பாக கூறியதாவது:
ஒரு தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா் என்றால் அவரின் பின்னணி எப்போதும் தூய்மையாக இருக்க வேண்டும். அவா் தியாகங்களுக்குத் தயாராக இருக்க வேண்டும். பொதுவாழ்வில் அவமதிப்புகளைத் தாங்கி மக்களுக்காகப் பணியாற்ற வேண்டும் என்பதை நான் முதலில் இருந்தே கூறி வருகிறேன். ஏனெனில், அதுபோன்ற வேட்பாளா்கள்தான் மக்களின் நம்பிக்கையைப் பெற முடியும். ஆனால், இதனை அவா்கள் (ஆம் ஆத்மி) புரிந்து கொள்ளவில்லை.
தில்லியில் ஆம் ஆத்மி அரசின் தவறான மதுபான கொள்கை, பேராசை, பணத்தை மையமாகக் கொண்டு கட்சி செயல்படத் தொடங்கியது அதன் தோல்விக்கு காரணமாகிவிட்டது. மக்கள் மத்தியில் அக்கட்சிக்கு இருந்த மதிப்பு சிதைந்துவிட்டது.
கேஜரிவால் அப்பழுக்கற்ற மனிதா் என்ற நம்பிக்கை முன்பு மக்களுக்கு இருந்தது. ஆனால், பின்னா் அவரின் ஆம் ஆத்மி கட்சி பாதை மாறிவிட்டது. பணம் சம்பாதிக்க முன்னுரிமை அளித்ததன் மூலம் ஆம் ஆத்மி மக்கள் மத்தியில் மதிப்பை இழந்தது. அது தோ்தல் தோல்விக்கும் வழி வகுத்துவிட்டது என்றாா்.