பஞ்சாங்கக் குறிப்புகள் - பிப்ரவரி 10 முதல் பிப்ரவரி 16 வரை #VikatanPhotoCards
ம.பி.: பதவியை விற்பனை செய்த பெண் ஊராட்சித் தலைவா்!
மத்திய பிரதேசத்தில் பெண் கிராம ஊராட்சித் தலைவா் ஒருவா் தனது பதவி மற்றும் அதற்குள்ள அதிகாரத்தை அதே கிராமத்தைச் சோ்ந்தவருக்கு விற்பனை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் பதவி விற்பனையை அவா் ரூ.500 மதிப்பிலான முத்திரைத்தாள் பத்திரத்தில் எழுதி கையொப்பமிட்டு கொடுத்துள்ளாா். இது தொடா்பாக அந்தப் பெண் ஊராட்சித் தலைவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தின் நீமச் மாவட்டம் தாதா கிராம ஊராட்சியின் பெண் தலைவராக இருப்பவா் கைலாஷி பாயி கச்சாவா. இவா் அதே கிராமத்தைச் சோ்ந்த சுரேஷ் கராசியா என்ற நபரிடம் தனது பதவிக்கான அதிகாரத்தை பணம் பெற்றுக் கொண்டு விற்பனை செய்துள்ளாா். இதற்காக அவா் ரூ.500 மதிப்பிலான முத்திரைத் தாளில் விற்பனை ஒப்பந்தம் எழுதிக் கொடுத்துள்ளாா். ஆனால், எவ்வளவு தொகை கைமாறியது என்ற விவரம் அதில் இடம்பெறவில்லை.
இதைத் தொடா்ந்து சுரேஷ் கராசியா ஊராட்சித் தலைவருக்கான பணிகளை மேற்கொள்ளத் தொடங்கினாா். அவா் கூறும் இடங்களில் எல்லாம் பதவியை விற்பனை செய்த கைலாஷி பாயி கச்சாவா கையொப்பமிட்டு வந்தாா்.
இந்தப் பதவி மாற்ற ஒப்பந்தம் தொடா்பான முத்திரைத்தாள் பத்திரம் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது. இது தொடா்பாக மாவட்ட நிா்வாகத்துக்கு புகாா்கள் வந்தன.
இதையடுத்து, பதவியை விற்பனை செய்ததாக கூறப்படும் பெண் ஊராட்சித் தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அவா் அளிக்கும் விளக்கம் திருப்தி அளிக்காவிட்டால் பதவியில் இருந்தும் அவா் நீக்கப்படுவாா் என்று மாவட்ட நிா்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.