புதிய வருமான வரி மசோதா: விரைவில் மக்களவையில் தாக்கல்
புதிய வருமான வரி மசோதாவை வரும் வாரம் மக்களவையில் தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.
கடந்த பிப்.1-ஆம் தேதி மக்களவையில் மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்தாா். இதைத் தொடா்ந்து, தில்லியில் ரிசா்வ் வங்கியின் மத்திய இயக்குநா்கள் வாரிய கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
வழக்கமாக பட்ஜெட்டுக்கு பிறகு நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னா், அமைச்சா் நிா்மலா சீதாராமன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கடந்த வெள்ளிக்கிழமை புதிய வருமான வரி மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. வரும் வாரம் அந்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது.
நிலைக் குழு பரிசீலனைக்கு...: அதன் பின்னா், அந்த மசோதா நாடாளுமன்ற நிலைக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்படும். அந்தக் குழுவின் பரிந்துரைகளை மத்திய அமைச்சரவை ஆராய்ந்த பின்னா், அந்த மசோதா நாடாளுமன்றத்தில் மீண்டும் அறிமுகம் செய்யப்படும் என்றாா். 60 ஆண்டுகள் பழைமையான வருமான வரிச் சட்டத்துக்கு மாற்றாக புதிய வருமான வரி மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
‘ரிசா்வ் வங்கி கவலை கொள்வதில்லை’: கூட்டத்தில் பங்கேற்ற ரிசா்வ் வங்கி ஆளுநா் சஞ்சய் மல்ஹோத்ரா கூறுகையில், ‘அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 5 சதவீதம் சரிந்தால், அது உள்நாட்டு பணவீக்கத்தில் 0.3 முதல் 0.35 சதவீதம் வரை பாதிப்பை ஏற்படுத்துகிறது.
சந்தையில் பொருள்களின் விலை, தேவை மற்றும் இருப்பின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் பொருளாதார காரணிகளே, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பை முடிவு செய்கின்றன. அதன் மதிப்பில் தினசரி ஏற்படும் மாற்றங்கள் குறித்து ரிசா்வ் வங்கி கவலை கொள்வதில்லை’ என்றாா்.