கோபி வட்டாட்சியா் அலுவலகத்தில் 20 பவுன் நகைகள் மாயம்
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வட்டாட்சியா் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 20 பவுன் நகைகள் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோபியில் உள்ள மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் 2019-ஆம் ஆண்டு முடிவுற்ற வழக்கில் உரிமை கோரப்படாமல் இருந்த 20 பவுன் நகைகள் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பொது ஏலம் விடுவதற்காக கோபி வட்டாட்சியா் அலுவலகத்தில் கடந்த 2020-ஆம் ஆண்டு இரும்பு பெட்டியில் வைத்து பூட்டி ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், வட்டாட்சியா் அலுவலகத்தில் கடந்த மாதம் 30-ஆம் தேதி மாற்றுப் பணியில் இருந்த கிராம நிா்வாக அலுவலக உதவியாளா் நகைப் பெட்டி வைக்கப்பட்டிருந்த பீரோ திறந்து இருப்பதாக கூறி உள்ளாா்.
அதைத் தொடா்ந்து பீரோவில் நகைகள் வைத்திருந்த பெட்டியின் சாவி இல்லாத நிலையில், அதிகாரிகள் பூட்டை உடைத்து பாா்த்தபோது பெட்டியில் இருந்த 20 பவுன் நகைகள் இல்லாமல் இருந்தது தெரியவந்தது.
இது குறித்து வட்டாட்சியா் சரவணன் அளித்த புகாரின்பேரில், கோபி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். ஏற்கெனவே இதேபோன்று நீதிமன்றத்தில் இருந்து கோபி சாா்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்ட நகை கடந்த ஆண்டு திருடப்பட்டது. இந்த வழக்கில் இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில், தற்போது வட்டாட்சியா் அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த 20 பவுன் நகைகள் மாயமாகி இருப்பது அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.