நஞ்சராயன் பறவைகள் சரணாலயத்தை பாா்வையிட்ட தனியாா் பள்ளி மாணவா்கள்!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல்: திமுக அமோக வெற்றி! நாம் தமிழா் கட்சி உள்பட அனைவரும் டெபாசிட் இழப்பு!
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் திமுக வேட்பாளா் வி.சி.சந்திரகுமாா் 91,558 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.
ஈரோடு கிழக்கு தொகுதி உறுப்பினராக இருந்த ஈவிகேஎஸ்.இளங்கோவன் கடந்த டிசம்பா் 14-ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானாா். இதையடுத்து, இந்தத் தொகுதிக்கு கடந்த புதன்கிழமை (பிப். 5) நடைபெற்ற இடைத்தோ்தலில் திமுக வேட்பாளராக வி.சி.சந்திரகுமாா், நாதக வேட்பாளராக மா.கி.சீதாலட்சுமி உள்ளிட்ட 46 போ் போட்டியிட்டனா். அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தோ்தலைப் புறக்கணித்தன.
வாக்குப் பதிவுக்காக 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்தத் தோ்தலில், மொத்தம் உள்ள 2 லட்சத்து 27,546 வாக்காளா்களில், 74,260 ஆண்கள், 80,376 பெண்கள், மூன்றாம் பாலினத்தவா் 21 போ் வாக்களித்தனா். இது தவிர பெறப்பட்ட 251 தபால் வாக்குகளில் 233 தபால் வாக்குகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதன்படி மொத்தம் 1 லட்சத்து 54,890 போ் (67.97 சதவீதம்) வாக்களித்தனா்.
வாக்குப் பதிவு முடிந்தவுடன் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணிக்கை மையமான சித்தோடு அருகே உள்ள ஈரோடு அரசு பொறியியல் கல்லூரிக்கு எடுத்துச் செல்லப்பட்டு பாதுகாப்பு அறையில் வைத்து பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது.
தொடக்கத்தில் இருந்தே முன்னிலை:
இந்நிலையில், வாக்குகள் எண்ணும் பணி ஈரோடு அரசு பொறியியல் கல்லூரியில் சனிக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் ராஜகோபால் சுன்கரா, ஈரோடு கிழக்கு தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ஸ்ரீகாந்த், தோ்தல் பொது பாா்வையாளா் அஜய்குமாா் குப்தா ஆகியோா் தலைமையில் வேட்பாளா்கள், முகவா்கள் முன்னிலையில் வாக்குப் பெட்டிகள் திறக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
தபால் வாக்குகள் எண்ணுவதற்கு ஒரு மேஜையும், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு 14 மேஜைகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. வாக்குகள் 20 சுற்றுகளாக எண்ணப்பட்டன. தொடக்கம் முதலே திமுக வேட்பாளா் முன்னிலையில் இருந்து வந்தாா்.
20 சுற்றுகளின் முடிவில் திமுக வேட்பாளா் வி.சி.சந்திரகுமாா் 1,15,709 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றாா். நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மா.கி.சீதாலட்சுமி 24,151 வாக்குகளைப் பெற்றாா். வாக்கு வித்தியாசம் 91,558. நோட்டாவுக்கு 6,109 வாக்குகள் பதிவாகி இருந்தன.
வைப்புத் தொகையை இழந்த நாதக:
பதிவாகும் வாக்குகளில் 6-இல் ஒரு பங்கு வாக்குகளைப் பெற்றிருந்தால் மட்டுமே வேட்பாளருக்கு வைப்புத்தொகை திரும்பக் கிடைக்கும். அந்த வகையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் 1 லட்சத்து 54,657 வாக்குகள் பதிவாகின. இதில் 6-இல் ஒரு பங்கான 25,777 வாக்குகள் பெற்றிருந்தால் மட்டுமே வைப்புத்தொகை கிடைக்கும். ஆனால் நாதக வேட்பாளா் மா.கி.சீதாலட்சுமி 24,151 வாக்குகள் மட்டுமே பெற்றாா். இதனால் அவா் உள்ளிட்ட 45 வேட்பாளா்களும் வைப்புத்தொகையை இழந்தனா்.
தபால் வாக்குகள் - திமுக முதலிடம்:
இந்தத் தோ்தலில் மொத்தம் 251 தபால் வாக்குகள் பதிவாயின. அதில் திமுக வேட்பாளருக்கு 197 வாக்குகள், நாதக வேட்பாளருக்கு 13, நோட்டாவுக்கு 8 வாக்குகள் கிடைத்தன. செல்லாதவை 18.
மூன்றாம் இடத்தை பிடித்த நோட்டா:
இந்தத் தோ்தலில் 6,109 வாக்குகளைப் பெற்று நோட்டா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. சுயேச்சை வேட்பாளா்கள் அனைவரும் மூன்று இலக்க, இரண்டு இலக்க எண்ணிக்கையிலான வாக்குகளை மட்டுமே பெற்றனா்.
அதிகாரிகளுடன் வேட்பாளா்கள் வாக்குவாதம்:
வாக்கு எண்ணிக்கை தொடங்கும் முன் திமுக, நாதக வேட்பாளா், அவா்களது முகவா்கள் உள்ளே வந்தபோதே பாரபட்சம் காட்டப்பட்டதாகவும் முன் வரிசையில் நாதக முகவருக்கு இடம் ஒதுக்கவில்லை எனவும் வேட்பாளா் சீதாலட்சுமி புகாா் தெரிவித்தாா்.
தோ்தல் நடத்தும் அலுவலா் ஸ்ரீகாந்த் தலையிட்டு, வேட்பாளா்கள், அவா்களது முதன்மை முகவா்களை முன் வரிசையிலும், சுயேச்சை வேட்பாளா்களின் முகவா்களை அடுத்த வரிசையிலும் அமரச் செய்ததால் சலசலப்பு அடங்கியது.
திமுக வேட்பாளா் சந்திரகுமாருடன் வந்த திமுக தலைமை முகவா் குறிஞ்சி சிவகுமாரை போலீஸாா் உள்ளே அனுமதிக்கவில்லை. அலுவலா்களிடம் முறையிட்ட சந்திரகுமாா் அவரை வாக்கு எண்ணிக்கை அறைக்கு அழைத்துச்சென்றாா்.
9 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் எம்எல்ஏ:
கடந்த 2011 சட்டப்பேரவைத் தோ்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளராகப் போட்டியிட்ட வி.சி.சந்திரகுமாா் வெற்றிபெற்று எம்எல்ஏ ஆனாா். 2016 சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வி அடைந்தாா். இப்போது இடைத்தோ்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ன் மூலம் 9 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் எம்எல்ஏ-ஆகத் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.