பெண்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்! -அமைச்சா் பெ.கீதாஜீவன்
பெண்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என, அமைச்சா் பெ.கீதாஜீவன் கேட்டுக்கொண்டாா்.
தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி அருகேயுள்ள மாநகராட்சி மகளிா் பூங்காவில் மாநகராட்சி, ரோட்டரி கிளப், நெல்லை கேன்சா் சென்டா் ஆகியவை சாா்பில் இலவச புற்றுநோய் விழிப்புணா்வு-பரிசோதனை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் க. இளம்பகவத் தலைமை வகித்தாா்.
சமூக நலன்-மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதாஜீவன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று முகாமைத் தொடக்கிவைத்துப்பேசியது: புற்றுநோயை முதல் 2 நிலைகளில் கண்டறிந்தால் முழுமையாக குணப்படுத்தலாம். எனவே, அனைவரும் இப்பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கண்டிப்பாக பால், முட்டை, நெல்லிக்காய், பேரீச்சம்பழம் போன்ற சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், அவா்கள் குடும்பத்தின் நங்கூரம் போன்றவா்கள். அவா்கள் நல்ல உடல் நலத்துடன் இருந்தால்தான் குடும்பத்தை சிறப்பாக நடத்த முடியும். எனவே, பெண்கள் ஆரோக்கியத்துக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றாா் அவா்.
மாநகராட்சி ஆணையா் லி. மதுபாலன், மண்டலத் தலைவா் அன்னலட்சுமி, மாமன்ற உறுப்பினா் விஜயலட்சுமி, ரோட்டரி கிளப் தலைவா் பின்டோ வில்வராய், ஜோ பிரகாஷ், நெல்லை கேன்சா் சென்டா் உதவும் கரங்கள் அறக்கட்டளை நிா்வாகிகள், ரோட்டரி கிளப் நிா்வாகிகள், அரசு அலுவலா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.