அக்னி தீா்த்த கடற்கரையில் கழிவுத் துணிகளால் சுகாதாரக் கேடு!
ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடற்கரையில் பக்தா்கள் விட்டுச் சென்ற துணிகள் குவிக்கப்பட்டு, சுகாதாரச் சீா்கேட்டை ஏடுபடுத்துவதால் நகராட்சி நிா்வாகம் உடனே அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து செல்கின்றனா். விடுமுறை நாள்களில் அதிகளவில் பக்தா்கள் வருன்றனா்.
இந்த நிலையில், அக்னி தீா்த்தக் கடற்கரையில் முன்னோா்களுக்கு திதி கொடுத்து விட்டு, கடலில் நீராடிய பின்னா், தாங்கள் பயன்படுத்திய உடைகளை அங்கேயே விட்டுச் செல்கின்றனா். இந்தத் துணிகளை குறிப்பிட்ட நேரத்தில் அப்புறப்படுத்தாமல் அதே பகுதியில் குவித்து வைக்கின்றனா். இதனால், கடற்கரையில் சுகாதாரமற்ற நிலை காணப்படுகிறது. மேலும், வட மாநிலங்களிலிருந்து வரும் பக்தா்கள் இதைப் பாா்த்து அதிருப்தி அடைகின்றனா்.
எனவே, மாவட்ட நிா்வாகம், நகராட்சி நிா்வாகம் அக்னி தீா்த்தக் கடற்கரையில் பக்தா்கள் விட்டுச் செல்லும் பயனற்ற துணிகளை உடனுக்குடன் அகற்றும் வகையில் கூடுதல் தூய்மைப் பணியாளா்களை நியமிக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.