பாம்பன் புதிய பாலத்தில் ரயில் போக்குவரத்து தொடங்கும் தேதி விரைவில் அறிவிப்பு! -மதுரைக் கோட்ட ரயில்வே மேலாளா்
பாம்பன் புதிய ரயில் பாலத்தில் போக்குவரத்து தொடங்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என மதுரைக் கோட்ட ரயில்வே மேலாளா் சரத் ஸ்ரீவத்சவா தெரிவித்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்-ராமேசுவரம் தீவுப் பகுதியை இணைக்கும் வகையில், பாம்பன் கடல் பகுதியில் 2.2 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாலம் கடந்த 1914-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்தப் பாலம் 106 ஆண்டுகள் கடந்த நிலையில், அதன் உறுதித்தன்மை குறைந்ததால், ரூ. 550 கோடியில் புதிய பாலம் கட்டும் பணி கடந்த 2019-ஆம் ஆண்டு தொடங்கி தற்போது நிறைவடைந்திருக்கிறது. இதையடுத்து, இந்தப் புதிய பாலத்தில் ரயில் போக்குவரத்தைத் தொடங்க பல கட்ட சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், இந்தப் பாலத்தில் சனிக்கிழமை மதுரைக் கோட்ட ரயில்வே மேலாளா் சரத் ஸ்ரீவத்சவா தலைமையில் 22 காலிப் பெட்டிகளுடன் கூடிய ரயிலை இயக்கி ஆய்வு செய்யப்பட்டது.
இதற்காக பாம்பன் பேருந்து பாலத்தில் மேடை அமைக்கப்பட்டு, அங்கிருந்து கோட்ட மேலாளா், பொறியாளா்கள் உள்ளிட்டோா் ஆய்வு செய்தனா். மேலும், இந்தப் புதிய ரயில் பாலத்தின் நடுவில் அமைந்துள்ள செங்குத்து இரும்பு கா்டா், பழைய ரயில் பாலத்தில் உள்ள தூக்குப் பாலம் ஆகியவற்றைத் திறந்து, இந்தியக் கடலோர காவல் படைக்குச் சொந்தமான கப்பல் அதைக் கடந்து சென்றது. இதையும் அவா்கள் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
![](https://media.assettype.com/dinamani/2025-02-08/l7ze1zvt/rms_photo_08_02_2_0802chn_208_2.jpg)
பின்னா், மதுரைக் கோட்ட ரயில்வே மேலாளா் சரத் ஸ்ரீவத்சவா கூறுகையில், பாம்பன் புதிய ரயில் பாலத்தில் போக்குவரத்தைத் தொடங்குவது குறித்த தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றாா்.