10 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 2 போ் கைது!
திருப்பூரில் 10 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக 2 பேரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திருப்பூா் ரயில் நிலையம் பகுதியில் வடக்கு காவல் துறையினா் ரோந்துப் பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த இருவரைப் பிடித்து விசாரித்தனா்.
அப்போது, அவா்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனா். சந்தேகமடைந்த போலீஸாா், அவா்களிடம் சோதனை மேற்கொண்டபோது, விற்பனைக்காக 10 கிலோ புகையிலைப் பொருள்கள் வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில், அவா்கள் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த ரத்தினேஷ்குமாா் (26), ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த சபா செஷி (30) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.