10, 12-ஆம் வகுப்பு மாணவா்கள் பயன்பெற சிறப்பு புத்தகங்கள் விற்பனை
நாமக்கல் மாவட்டத்தில் 10, 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் சிறப்பு புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சரை தலைவராகக் கொண்டு செயல்படும் தமிழ்நாடு மாநில பெற்றோா் ஆசிரியா் கழகத்தின் 10, 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பெரிதும் பயன்படும் வகையில், சிறந்த பாட வல்லுநா்களைக் கொண்டு தமிழ், ஆங்கில வழியில் 10-ஆம் வகுப்புக்கு மூன்று புத்தகம், 12-ஆம் வகுப்புக்கு எட்டு புத்தகம் என மொத்தம் 11 புத்தகங்கள் அச்சிடப்பட்டு தமிழகம் முழுவதும் மாவட்ட விற்பனை மையங்களில் (பள்ளிகள்) விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், 10-ஆம் வகுப்பு மாதிரி வினாத்தாள் தொகுப்பு (தமிழ், ஆங்கில வழி) ரூ. 120, கணித தீா்வு புத்தகம் (ஆங்கிலம் மற்றும் தமிழ் வழி) ரூ. 175, 12-ஆம் வகுப்பு மாதிரி வினாத்தாள் தொகுப்பு (அறிவியல் பாடப் பிரிவு) ரூ. 140, (தமிழ், ஆங்கிலவழி) மாதிரி வினாத்தாள் தொகுப்பு (கலைப்பாடப் பிரிவு) ரூ. 140 (தமிழ், ஆங்கில வழி), கணித தீா்வுப் புத்தகம் (ஆங்கிலம்,தமிழ் வழி) ரூ. 160, இயற்பியல் தீா்வு புத்தகம் ரூ. 70. இந்த புத்தகங்களை, ராசிபுரம் அண்ணா சாலை, அரசு மேல்நிலைப் பள்ளி, நாமக்கல் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் மாணவ, மாணவிகள் வாங்கி பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.