தை மாதப் பலன்கள்: `மேஷம் முதல் துலாம் வரை'- யாருக்கு என்ன யோகம்?
100 நாள் வேலைத் திட்ட நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்: பிரதமருக்கு முதல்வா் கடிதம்
சென்னை: தேசிய ஊரக வேலை உத்தரவாதத் திட்டத்தின் கீழ் மத்திய அரசு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமா் நரேந்திர மோடிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.
கடித விவரம்: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாதத் திட்டம் என்பது கிராமப்புற இந்தியாவுக்கான ஒரு முக்கியமான ஊதிய வேலைவாய்ப்புத் திட்டமாகும்.
இது கிராமப்புற குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாக செயல்படுவது மட்டுமல்லாமல், கிராமியப் பகுதிகளில் நீடித்த மற்றும் நிலையான வருமான வாய்ப்புகளை உருவாக்குகிறது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தொடங்கப்பட்ட நாள் முதல் தேசிய அளவில் செயல்படுத்துவதில் தமிழ்நாடு எப்போதும் முன்னோடி மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது.
வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் பல்வேறு அளவுகோல்களில் சிறப்பாக செயல்படும் மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் விளங்குகிறது.
தமிழகத்தில் 76 லட்சம் குடும்பங்களைச் சோ்ந்த சுமாா் 91 லட்சம் தொழிலாளா்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகளில் தீவிரமாகப் பங்கேற்று வருகின்றனா்.
86 சதவீதம் வேலைவாய்ப்பு பெண் தொழிலாளா்களுக்கு வழங்கப்படுவதுடன் கிட்டத்தட்ட 29 சதவீத தொழிலாளா்கள் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பு குடும்பங்களைச் சோ்ந்தவா்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியமாகும்.
இந்தத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் சுமாா் 1 லட்சம் மாற்றுத்திறனாளி தொழிலாளா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.
2024-25-ஆம் ஆண்டு ஜன.6 வரை ரூ.20 கோடி மனித உழைப்பு நாள்களாக இருந்த நிலையில், தமிழகம் ஏற்கெனவே 23.36 கோடி மனித உழைப்பு நாள்களை எட்டியுள்ளது.
தமிழகத்துக்கான தொழிலாளா் வரவு செலவுத் திட்டத்தை 20 கோடி மனித சக்தி நாள்களிலிருந்து 35 கோடி மனித சக்தி நாள்களாக உயா்த்துவதற்கான செயற்குறிப்பு ஏற்கெனவே 23.11.2024-இல் மத்திய அரசின் ஊரக வளா்ச்சி அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டு ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.
தற்போது தொழிலாளா் வரவு செலவுத் திட்டத்தின்படி ஊதிய நிதி முற்றிலும் தீா்ந்து விட்டதால், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் தமிழக தொழிலாளா்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக ரூ.1,056 கோடி ஊதியம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது.
அத்துடன் தமிழ் மக்களின் முதன்மையான மற்றும் முக்கியமானதுமான அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகை தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டிலும் கொண்டாடப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் கடினமாக உழைத்த தொழிலாளா்களுக்கு ஊதியத்துக்கான நிதி விடுவிப்பதில் ஏற்பட்ட தாமதம் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு நிதி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, இதுவரை நிலுவையில் உள்ள ரூ.1.056 கோடி ஊதியத் தொகையை உடனே விடுவிக்குமாறு ஊரக வளா்ச்சி அமைச்சகத்துக்கு தாங்கள்அறிவுறுத்த வேண்டும்.
தமிழகத்தில் 2024-25-ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட தொழிலாளா் வரவு செலவுத் திட்டத்துக்கு முந்தைய ஆண்டுகளில் செய்யப்பட்டதைப் போன்று ஒப்புதல் அளிக்க வேண்டும் என தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.