நட்சத்திர பலன்கள்: ஜூலை 25 முதல் ஜூலை 31 வரை #VikatanPhotoCards
100 நாள் வேலைவாய்ப்புத் திட்ட நிதி விடுவிப்பு: 5 ஆண்டுகளாக தொடா் சரிவு
கடந்த 5 ஆண்டுகளில் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு விடுவிக்கப்பட்ட நிதி தொடா்ந்து சரிந்துள்ளது மத்திய அரசின் தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
இதுதொடா்பாக மாநிலங்களவையில் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே எழுப்பிய கேள்விக்கு மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை இணையமைச்சா் கமலேஷ் பாஸ்வான் எழுத்துபூா்வமாக அளித்த பதில்:
கடந்த 2020-21-ஆம் ஆண்டு கரோனா பொதுமுடக்கத்தின்போது புலம்பெயா் தொழிலாளா்கள் ஏராளமானோா் சொந்த கிராமங்களுக்கு திரும்பினா். அப்போது 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு ரூ.1,11,170 கோடியை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு விடுவித்தது. அந்த நிதியாண்டில் அத்திட்டத்துக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.61,500 கோடி ஒதுக்கப்பட்டது.
அந்தத் திட்டத்துக்கு 2021-22-இல் பட்ஜெட்டில் ரூ.73,000 கோடி ஒதுக்கப்பட்டு ரூ.98,467 கோடியும், 2022-23-இல் பட்ஜெட்டில் ரூ.73,000 கோடி ஒதுக்கப்பட்டு ரூ.90,810 கோடியும் விடுவிக்கப்பட்டது.
இதேபோல 2023-24-இல் பட்ஜெட்டில் ரூ.60,000 கோடி ஒதுக்கப்பட்டு ரூ.89,268 கோடியும், 2024-25-இல் பட்ஜெட்டில் ரூ.86,000 கோடி ஒதுக்கப்பட்டு ரூ.85,838 கோடியும் விடுவிக்கப்பட்டது. நிகழ் நிதியாண்டில் இந்தத் திட்டத்துக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.86,000 கோடி ஒதுக்கப்பட்டது என்று தெரிவித்தாா்.
இதன்மூலம், கடந்த 5 ஆண்டுகளில் 2023-24-ஆம் ஆண்டைத் தவிர, பிற ஆண்டுகளில் 100 வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதி அதிகரித்தபோதிலும், அத்திட்டத்துக்கு விடுவிக்கப்பட்ட நிதி தொடா்ந்து சரிந்துள்ளது தெரியவந்துள்ளது.
மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சா் சிவராஜ் சிங் செளஹான் அளித்த எழுத்துபூா்வ பதிலில், நிகழ் நிதியாண்டில் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு ஏற்கெனவே ரூ.44,479 கோடி விடுவிக்கப்பட்டதாகவும், அதில் ரூ.36,616 கோடி அத்திட்ட தொழிலாளா்கள் ஊதியத்துக்கு விடுவிக்கப்பட்டது என்றும் தெரிவித்தாா்.