கள்ளச்சாராய வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றியிருப்பது நிர்வாக சீர்குலைவை ஏற்படு...
1000 நாள்களை எட்டிய போர்... உக்ரேனுக்கு எதிராக அணு ஆயுதத்தை கையிலெடுக்கப்போகிறதா ரஷ்யா?!
ஆயிரம் நாட்களைக் கடந்தும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்ரோஷப் போர் இன்னும் நின்றபாடில்லை. போர் நிறுத்தும் ஏற்படுமா என உலக நாடுகள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில், உக்ரைனுக்கு எதிரான போரில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தவும் தயங்கமாட்டோம் எனப் புதுத் தீர்மானத்தில் கையெழுத்திட்டு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார் ரஷ்ய அதிபர் புதின். போரின் கோரம் எப்போதுதான் முடிவுக்கு வரும்?
ரஷ்யாவின் கடும் எதிர்ப்பையும் மீறி நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைனை இணைக்கும் வேலைகளில் ஈடுபட்டார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி. இதனால் கடுங்கோபம்கொண்ட ரஷ்ய அதிபர் புதின் 2022, பிப்ரவரி 24-ம் தேதி உக்ரைன்மீது போர்த்தொடுக்க தனது நாட்டு ராணுவத்துக்கு அதிரடியாக உத்தரவிட்டார். இதையடுத்து, உக்ரைன்மீது வான்வழியாகக் குண்டுமழை பொழிந்தது ரஷ்ய விமானப்படை. அதைத்தொடர்ந்து தரைவழித் தாக்குதல்களையும் தொடங்கியபடி உக்ரைன் எல்லைக்குள் நுழைந்தது ரஷ்ய ராணுவம். அடுத்தடுத்து உக்ரைனின் பகுதிகளை ஆக்கிரமித்துக்கொண்டே வந்தே ரஷ்யப் படைகள், உக்ரைன் தலைநகர் கீவ்வை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தது. அந்தநிலையில்தான், அமெரிக்கா, பிரிட்டன் போன்ற மேற்குலக நாடுகளின் ஆயுத உதவிகள் கிடைக்க புதுத்தெம்பு பெற்ற உக்ரைன் மாபெரும் ரஷ்யப் படைகளை எதிர்த்து மல்லுக்கட்டியது. ரஷ்யா வசம் சென்ற பகுதிகளில் சிலவற்றையும் திரும்ப மீட்டது. ரஷ்யா ஆக்கிரமிப்பில் பெற்றது, உக்ரைன் திரும்ப மீட்டது ஒருபுறமிருக்க போர் நடைபெற்றுவரும் ஆயிரம் நாட்களில் இருநாடுகளும் இழந்ததுதான் ஏராளம்.
`ரஷ்யா- உக்ரைன் போரில், இதுவரையில் 1,20,000 ராணுவ வீரர்களை இழந்திருக்கிறது ரஷ்யா. சுமார் 1,80,000 ரஷ்ய ராணுவ வீரர்கள் பலத்த காயமடைந்திருக்கின்றனர். அதேபோல, உக்ரைன் சுமார் 80,000 படை வீரர்களை பறிகொடுத்திருக்கிறது. மேலும், 1,20,000 பேர் கடுமையாக காயமடைந்திருக்கின்றனர். இருப்பினும் இந்த எண்ணிக்கையை இரண்டு நாடுகளும் குறைத்தே கூறிக்கொண்டிருக்கின்றன. இரண்டு நாடுகளும் வெவ்வேறு புள்ளி விவரங்களை வெளியிட்டு குழப்பி வருகின்றன' என்கிறார்கள் சர்வதேச அரசியல் நோக்கர்கள். அதேசமயம் இங்கிலாந்தோ, கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் நாளொன்றுக்கு சுமார் 1500 ரஷ்ய வீரர்கள் இந்தப் போரில் கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்தப் போர் ரஷ்யாவுக்கு பேரிழப்பு என்றது.
அதேபோல, பொதுமக்களைப் பொறுத்தவரையில் 600-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்பட சுமார் 14,000-க்கும் அதிகமானோர் ரஷ்யா-உக்ரைன் போரின் கோரப்பிடியில் சிக்கி உயிரிழந்திருப்பதாக ஐ.நா தெரிவிக்கிறது. மேலும், கடந்த ஆயிரம் நாட்களில், 1,496 கல்வி நிறுவனங்கள், 662 சுகாதார நிலையங்கள் சேதமடைந்திருப்பதாக ஐ.நா தெரிவிக்கிறது. தொடர்ந்து, கடந்த மூன்று மாதங்களாகவே உக்ரைன் மின் உற்பத்தி நிலையங்கள், மின் பகிர்வு மையங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, நேற்றுகூட 120 ஏவுகணைகள், ஆளில்லா விமானங்கள் மூலம் உக்ரைன் மின் உற்பத்தி நிலையங்களைத் தாக்கியது.
இந்த நிலையில்தான், அமெரிக்காவில் ஏற்பட்டிருக்கும் ஆட்சி மாற்றம் ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவரும் என உலக நாடுகள் பலவற்றாலும் நம்பப்பட்டது. காரணம், பைடன் தலைமையிலான அமெரிக்க ஆட்சிக் காலத்தில்தான் உக்ரைன் - ரஷ்யா போர் தொடங்கி தீவிரமடைந்தது. போர் நிறுத்தத்துக்கான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், அந்த எரியும் தீயில் எண்ணெய் ஊற்றும் விதமாக பைடனும் பில்லியன் கணக்கான நவீன ஆயுத உதவிகளை உக்ரைனுக்கு வழங்கி ரஷ்யாவை கொதிப்படையச் செய்துகொண்டிருந்தார். அந்தச் சூழலில் பேசிய ட்ரம்ப், ``ரஷ்யா - உக்ரைன் போரை 24 மணிநேரத்தில் முடிவுக்கு கொண்டுவரலாம். அதற்கான வழிமுறை என்னிடம் இருக்கிறது. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வந்து, ஒரு ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதே அமெரிக்காவுக்கு சிறந்த நலன் என்று நான் நினைக்கிறேன்" என்றார்.
இந்த நிலையில், நடந்த முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் அதிபராக வெற்றி பெற, ``நான் போர்களை தொடங்கப் போவதில்லை; நடைபெற்றுக்கொண்டிருக்கும் போர்களை நிறுத்தப்போகிறேன்" என்றுகூறி நம்பிக்கையைக் கொடுத்தார்.
ஆனால், அதற்கு மாற்றாக ரஷ்ய அதிபர் புதின் புதிய அணுகுண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறார். அதாவது, அமெரிக்கா கொடுத்திருக்கும் நீண்ட தூரம் சென்று இலக்குகளை துல்லியமாக தாக்கும் ஏவுகணைகளை போரில் ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் பயன்படுத்தினால், ரஷ்யா அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் என்று அதிரடியாக அறிவித்திருக்கிறது ரஷ்யா. இதற்காக, ரஷ்யா தனது அணு ஆயுதக் கொள்கையில் புதிய சட்ட திருத்தத்தையும் மேற்கொண்டிருக்கிறது. அதாவது, அணு ஆயுதம் வைத்திருக்காத உக்ரைன் நாடு, அணு ஆயுதம் வைத்திருக்கக்கூடிய அமெரிக்க நாட்டுடன் கூட்டுவைத்துக்கொண்டு, ரஷ்யா மீது தாக்குதல் நடத்தினால், அதற்கு பதிலடியாக உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யாவும் அணு ஆயுதத்தைப் பயன்படுத்தலாம் என்று ரஷ்யா தெரிவித்திருக்கிறது.
இதுகுறித்து பேசியிருக்கும் ரஷ்ய அதிபர் மாளிகையின் செய்தித் தொடர்பாளர், ``அணு ஆயுதங்களைத் தவிர்க்கும் வழிகளைத்தான் நாங்கள் பார்க்கிறோம். ஆனால், அவற்றைப் பயன்படுத்த வேண்டிய நிர்பந்தத்துக்கு நாங்கள் தள்ளப்பட்டால், தற்காப்புக்கு எங்களுக்கு வேறு வழியில்லை! நாங்கள் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை. அணு ஆயுதம் இல்லாத ஒரு நாடு அணு ஆயுதம் வைத்திருக்கும் நாட்டுடன் இணைந்து எங்களுடன் போரில் ஈடுபட்டால் அது கூட்டுத் தாக்குதல்தான்!" என்று விளக்கமளித்திருக்கிறார். ரஷ்யாவின் இந்த அதிரடி முடிவால் ரஷ்ய - உக்ரைன் போர் இன்னும் தீவிரமடையும் என அச்சம் தெரிவிக்கிறார்கள் சர்வதேச அரசியல் வல்லுநர்கள்!
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...