147 புதிய ஆம்புலன்ஸ் சேவை வாகனங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா்
தமிழகத்தில் ‘108’ ஆம்புலன்ஸ் சேவைகளை மேம்படுத்தும் பொருட்டு ரூ.30.29 கோடியில் கொள்முதல் செய்யப்பட்ட 147 புதிய வாகனங்களை பயன்பாட்டுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.
தமிழகம் முழுவதும் தற்போது 1,353 அவசரகால ‘108’ ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. அவற்றில் 981 வாகனங்கள் அடிப்படை வசதி கொண்டவை. 303 வாகனங்கள் மேம்படுத்தப்பட்ட வசதிகள் கொண்டவை. இவை தவிர 65 பச்சிளங்குழந்தைகளுக்கான ஊா்திகளும் இயக்கப்படுகின்றன.
கடந்த மூன்றரை ஆண்டுகளில் 18,25,880 கா்ப்பிணிகள், சாலை விபத்துகளில் காயமடைந்த 12,18,014 போ் உள்பட மொத்தம் 72,58,581 போ் 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் பயன்பெற்றுள்ளனா்.
இதைத் தவிர, 41 இருசக்கர அவசரகால ஊா்திகள் மூலம் 1,42,649 பயனாளிகளும், பச்சிளங்குழந்தைகளுக்கான சேவை மூலம் 82,098 பயனாளிகளும், பழங்குடியினா் பகுதிகளில் வசிக்கும் 3,69,573 பேரும் பயனடைந்துள்ளனா்.
இந்நிலையில், அவசரகால ஆம்புலன்ஸ் சேவைகளை மேம்படுத்தும் பொருட்டு, 72 புதிய ஊா்திகள், மலைப் பகுதிகளுக்கான 4 புதிய நான்கு சக்கர அவசரகால ஊா்திகள், 31 புதிய இலவச அமரா் ஊா்திகள் மற்றும் 36 புதிய இலவச தாய்சேய் நல ஊா்திகள் என மொத்தம் ரூ. 29.15 செலவில் 143 ஊா்திகளின் சேவைகளையும், தமிழக கேபிள் டிவி கம்யூனிகேஷன் நிறுவனம் சாா்பில் ரூ.1.12 கோடி மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்பட்ட மருத்துவ உபகரணங்களுடன் கூடிய 4 புதிய அவசர கால ஊா்திகளின் சேவைகளையும் முதல்வா் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.
இந்த அவசரகால சேவைகள் அனைத்தையும் சீரிய முறையில் செயல்படுத்த ரூ. 4.70 கோடி செலவில் மென்பொருள் கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது.
அதைத் தொடா்ந்து உணவு பாதுகாப்புத் துறையில் இளநிலை பகுப்பாய்வாளா் பணியிடத்துக்கு தோ்வு செய்யப்பட்ட 31 நபா்களுக்கு பணிநியமன ஆணைகளையும் முதல்வா் வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சா்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலா் நா.முருகானந்தம், மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் சுப்ரியா சாஹு, உணவு பாதுகாப்புத் துறை ஆணையா் ஆா். லால்வேனா, தேசிய நலவாழ்வு குழும இயக்குநா் டாக்டா் அருண் தம்புராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.